ஐ நா மனித உரிமை கவுன்சிலில் இந்தியாவின் வலுவான பதிலடி

பாகிஸ்தான் விவகாரங்கள் குறித்த ஆய்வாளர் டாக்டர் ஜைனாப் அக்தெர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் நித்யா வெங்கடேஷ்

ஐ நா மனித உரிமைகள் கவுன்சிலின் 42 ஆவது கூட்டத்தில் கஷ்மீர் குறித்த தீர்மானத்தைக் கொண்டு வரும் நோக்கில், இதனை ஒரு சர்வதேச விவகாரமாக சித்தரிக்க முயன்ற பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹமூத் குரேஷியின் முயற்சி தோல்வியையே தழுவியது. 47 உறுப்பினர் கொண்ட இந்த கவுன்சிலில் 24 நாடுகளின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், இது குறித்த அவசர விவாதத்துக்கான கோரிக்கைக்குக் கூட ஆதரவு பெற பாகிஸ்தானால் இயலவில்லை என்பதே உண்மை. விவாதத்துக்கான் கோரிக்கை அந்தக் கூட்டத்தொடரின் போது எப்போது வேண்டுமானாலும் வைக்கப்படலாம் என்ற நிலையில், காஷ்மீர் குறித்த தீர்மான நிறைவேற்றக் கோர செப்டம்பர் 19 இறுதி நாளாகும். இந்த விஷயம் சர்வதேச மன்றத்தில் விவாதிக்கப்பட அவசியமில்லாத ஒன்று என்ற நிலைப்பாடு கொண்ட இந்தியா, ஜெனீவாவுக்கு ஒரு அமைச்சரை அனுப்பவும் தயாராக இல்லை. ஆனால், பாகிஸ்தானின் வாதங்களை மனதைப் புண்படுத்தும் நோக்கில் இட்டுக்கட்டப்பட்ட பொய்க்குற்றச்சாட்டு, என வன்மையாகக் கண்டித்துள்ளது.

கஷ்மீரில் மனித உரிமை மீறல் என்ற வாதத்தை முன்னெடுத்த ஷா மெஹமூத் குரேஷி, இதில், ஐ நா-வின் கூட்டு விசாரணையையும் கோரினார். கஷ்மீர் விவகாரம் முழுக்க முழுக்க ஒரு உள்நாட்டு விவகாரம் என்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திலிருந்து மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன எனும் ஆணித்தரமாக உறுதிப்படுத்தியது இந்தியா. மேலும், மிக மோசமான மனித உரிமை மீறல் என்பது பயங்கரவாதத்திலிருந்து தான் உருவாகிறது என்று கூறி பாகிஸ்தானைத் திருப்பித் தாக்கிய நமது பிரதிநிதிகள், இந்த பயங்கரவாத நிகழ்வுகள் குறித்து தமது கருத்தை உரத்த குரலில் பதிவு செய்யுமாறு கவுன்சில் உறுப்பினர்களையும் கேட்டுக்கொண்டனர்.

பாகிஸ்தானுக்கான முன்னாள் இந்தியத் தூதர் அஜய் பிசாரியா, ஐ நா- வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியும் தூதருமான ராஜீவ் சந்தர் ஆகியோருடன் இணைந்து, இந்தியாவின் ராஜ்ஜிய பிரதிநிதி விஜய் டாகூர் சிங் பாகிஸ்தான் மீதான குற்றச்சாட்டை முன்மொழிந்தார். “ என் தேசத்துக்கெதிரான தவறான, இட்டுக்கட்டப்பட்ட, பொய்க்குற்றச்சாட்டுக்களை ஒரு குழு அடுக்கியுள்ளது. சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாகவும் பல ஆண்டுகளாக பயங்கரவாத இயக்கங்களின் தலைவர்களைப் பாதுகாத்தும் வரும் ஒரு தேசத்திடமிருந்து இந்தக் குற்றச்சாட்டுகள் வருகின்றன என்பதை உலகம் அறியும். ராஜதந்திரத்துக்கு மாற்றாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஏவும் நாடு இது” என்று விஜய் டாகூர் சிங் கூறினார். பாகிஸ்தானின் உள் நாட்டு மனித உரிமை மீறல் விவகாரங்கள் குறித்தும் அந்நாட்டிலிருந்து ஏவப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்தும் நமது பிரதிநிதி குழு வலியுறுத்தியது.

பாகிஸ்தானின் ஆளும் கட்சியான தெஹ்ரிக் – இ-இன்சாஃப் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பல்தேவ் சிங் என்பவர் இந்தியாவில் அடைக்கலம் கோரியுள்ளார். ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில் அவர், ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களுக்கும் கூட அந்நாட்டில் பாதுகாப்பில்லை என்று கூறியுள்ளார். தவிர, உலக சிந்தி கூட்டமைப்பு, ஜெனீவாவின் நடைபெறும் இந்த ஐ நா வின் மனித உரிமை கவுன்சில் கூட்ட வளாகத்தின் வெளியே, சிந்த், பலோசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா ஆகிய பகுதிகளில் அரங்கேறிவரும் மனித உரிமை மீறல் குறித்து உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் போராட்டங்கள் நடத்தினர். இவ்விரு நிகழ்வுகளும் இந்தியாவின் வாதத்தை வலுவானதாகவும் உண்மையானதென்றும் காட்டுகின்றன.


கஷ்மீர் பகுதியில் இந்தியாவிற்கு எதிராக போராட்டங்களையும் தாக்குதல்களையும் அரங்கேற்ற வகை செய்யும் நோக்கில் ஜெய்ஷ் – ஏ – மொஹமது பயங்கரவாத இயக்கத் தலைவன் மசூத் அசாரை விடுவிக்க பாகிஸ்தான் தயாராகி வருவதாக, ஜெனீவா கூட்டத்திற்கு சற்று முன் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஒரு புறம் ராஜஸ்தான் – சியால் கோட் பகுதியில் தனது துருப்புகளைக் குவித்து, மறுபுறம் ஜம்மு கஷ்மீரில் ஊடுருவல்களை அதிகரித்து, இரு முனைத் தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானின் செயல்பாடுகள், இந்தியாவிற்கான உலக நாடுகளின் ஆதரவைப் பெருக்கவே உதவியுள்ளன. தவிர, பாகிஸ்தானின் வாதங்கள் கேள்விக்குள்ளாகியுள்ளன.

ஐ நா மனித உரிமை கவுன்சிலில் பாகிஸ்தானின் தோல்வி மற்றும் தொடர்ந்து அது பயங்கரவாதத்துக்கு அளித்து வரும் ஆதரவு இவற்றால், செப்டம்பர் 27 ஆம் தேதி ஐ நா-வில் இம்ரான் உரையாற்றும் போது பாகிஸ்தானின் வாதங்கள் வலுவிழந்து போகும் என்பது உறுதி. அனைத்து மன்றங்களிலும் பாகிஸ்தான் உரத்த குரலில் ஆதரவு கோரும் நிலையில், கஷ்மீர் குறித்த தனது முடிவுக்கு உலக நாடுகளின் ஆதரவைப்பெற, இந்தியா, அமைதியான முறையில் உத்திகளைப் பயன்படுத்தி வருகிறது. தோல்விகளுக்குப் பின்னரும் இந்த விவகாரத்தை தனது பொய்ப் பிரச்சாரங்களினால் ஊதிப் பெரிது படுத்தவும் தீவிரவாதத்தைத் தூண்டிவிடவும் பாகிஸ்தான் தவறாது.

முற்றுகை இடப்பட்டதாக பாகிஸ்தானால் பொய்ப் பிரச்சாரம் செய்யப்படும் ஜம்மு கஷ்மீர் மக்களுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் செப்டம்பர் 13, வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஷ்மீரின் முசாஃபராபாத்தில் ஒரு மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை அறிவித்துள்ளார் இம்ரான் கான். இந்தியா விழிப்புணர்வுடன் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அக்டோபரில் நடைபெறவுள்ள (FATF) நிதிச் செயல்பாட்டுப் பணிக்குழுவின் அடுத்த கூட்டத்திற்கு முன் பாகிஸ்தானைக் கருப்புப்பட்டியலில் இணைக்க ஆவன செய்ய வேண்டியது அவசியமாகும்






Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.