நாடாளுமன்றத்தில் கடந்த வாரம்
பத்திரிக்கையாளர் யோடேஷ் சூட் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி ராமமூர்த்தி
நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலங்களவையிலும் கம்பெனிகள் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து பல்வேறு அவசரச் சட்டங்கள் முடிவுக்கு வந்தன.
கடந்த 16 ஆவது மக்களவையில் பத்துக்கும் மேற்பட்ட அவசரச் சட்டங்கள் நிலுவையில் இருந்தன. முத்தலாக் தொடர்பான அவசரச் சட்டம், தேசிய மருத்துவ ஆணையம், ஜம்மு காஷ்மீர் சம்பந்தப்பட்ட அவசரச் சட்டங்களும் நிலுவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. முத்தலாக் சட்டம் தொடர்பான விவாதம் முடிவுறும் நிலையில், கம்பெனிகள் சட்ட திருத்த மசோதா எடுத்துக்கொள்ளப்பட்டது. கம்பெனிகள் சமூக அக்கறை செலவினத்திற்கான தொகையைத் தனியாக வங்கிக்கணக்கில் பராமரிக்க வேண்டும் என்பது கம்பெனிகள் மசோதாவில் முக்கியமான திருத்தமாக அமைந்தது. மாநிலங்களவையில் இஸ்லாமியப் பெண்கள் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றாப்பட்டது. உச்ச நீதி மன்றத் தீர்ப்புக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் சாதனையாக இச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் சட்டம் ஐந்து நாட்களுக்குப் பின்னர் மாநிலங்களவையில் நிறைவேறியது.
மாநிலங்களைவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உறுப்பினர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்த போதும், முத்தலாக் சட்டம் நிறைவேறியது சாதனையாகும். தேவையில்லாத விவாகரத்து முறையில் இருந்த இஸ்லாமியப் பெண்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். பாலின சமத்துவத்தை நிலைநாட்ட இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பு மசோதா துணை புரியும் என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். மக்களாட்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவுபடக் கூறினார். முத்தலாக் முறை பின்பற்றப்பட்டால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைப்பது இச்சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கம்பெனிகள் திவால் மசோதா, தேசிய மருத்துவ ஆணையம் மசோதா, கம்பெனிகள் சட்ட திருத்த மசோதா, மோட்டார் வாகன திருத்தச் சட்டம் ஆகியவை மாநிலங்களையில் நிறைவேற்றப்பட்டன. நுகர்வோர் பாதுகாப்பு மசோதா, நதிநீர் விவகாரங்கள் மசோதா ஆகியவை மக்களவையில் கடந்த வாரத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை மேம்படுத்தவும் தொழில் முனைவோருக்கு உதவி செய்யும் வகையிலும் நிதிநிலை அறிக்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்தார். வங்கிகள் அல்லாத நிதிநிறுவனங்களை முறைப்படுத்தத் தேவையான முயற்சிகளை ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் என அவர் உறுதி அளித்தார்.
மாநிலங்களவையில் கம்பெனி திவால் மசோதா திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த மசோதாவின் படி நிறுவனங்கள் கலைக்கப்படும் போது, கடைபிடிக்கப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இச்சீர்திருத்தப்பட்ட முறைகளை 330 நாட்களுக்குள் உறுதி செய்ய வேண்டியது கம்பெனி திவால் மசோதாவின் முக்கிய வழிகாட்டுதலாகும்.
முறைபடுத்தப்படாத முதலீட்டுத் திட்டங்கள் மசோதா 2015 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதையொட்டி, பொது மக்களின் பணம் பாதுகாக்கப்படுவதற்கான சீர்திருத்தங்கள் இம்மசோதாவில் இடம் பெற்றுள்ளன. இந்திய மருத்துவச் சட்டம் 1956 –ஐ முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், தேசிய மருத்துவ ஆணையம் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. தரமான மருத்துவர்களை உருவாக்கவும் வெளிப்படையான மருத்துவ முறைகளையும் உறுதி செய்யும் வகையில் தேசிய மருத்துவ ஆணையம் வழிவகை செய்யும் என சுகாதாரத் துறாஇ அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் அவர்கள் மக்களவையில் அறிவித்தார்.
நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அமைக்க வகை செய்யும் நுகர்வோர் பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 ஐ முடிவுக்குக் கொண்டு வரும் புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், நுகர்வோரின் பிரச்சனைகளுக்கு ஆறுதல் தருவதாக அமையும் என்று கூறினால் அது மிகையாகாது.
Comments
Post a Comment