இந்திய வெளியுறவு அமைச்சரின் முதல் வங்கதேசப் பயணம்.
(ஸ்டேட்ஸ்மன் சிறப்புப் பிரதிநிதி, திபங்கர் சக்கரவர்த்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.)
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்கள் பங்களாதேஷ் நாட்டிற்குத் தனது முதல் பயணத்தை மேற்கொண்டார். இந்தப் பயணமானது, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா அவர்களை அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ள, பிரதமர் திரு நரேந்திர மோதி விடுத்துள்ள அழைப்பை வெளிப்படுத்தும் ஒரு மரியாதை நிமித்தப் பயணமாக அமைந்திருந்தது. இருநாடுகளுக்கும் இடையே, இருதரப்பு உறவுகள் தொடர்ந்து முன்னேறி வரும் தருணத்தில் இந்தப் பயணம் அமைந்துள்ளது.
பங்களாதேஷ் பிரதமருடன் ஏற்பட்ட, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் சந்திப்பானது, ஆக்கப்பூர்வமான வகையில் அமைந்திருந்தது. இருநாட்டுப் பிரதமர்களுக்கும் இடையே அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்கவிருக்கும் சந்திப்பிற்கான முன்னேற்பாடாக இந்தப் பயணம் அமைந்தது.
’கணோபந்தன்’ என்ற பெயர் கொண்ட ஷேக் ஹசீனா அவர்களின் அரசாங்க இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது, டாக்டர் ஜெய்சங்கர், பிரதமர் திரு நரேந்திர மோதியின் அழைப்புக் கடிதத்தை சமர்ப்பித்தார். பிரதமரின் அழைப்புக்கு ஷேக் ஹஸீனா அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அக்டோபர் மாதம் ஏற்படவிருக்கும் அவரது பயணத்தை இந்தியா ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக, ஷேக் ஹஸீனா அவர்களிடம் வெளியுறவு அமைச்சர் கூறினார். டாக்டர் ஜெய்சங்கரும், ஷேக் ஹசீனா அவர்களும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் என்றும், அப்போது பரஸ்பர ஈடுபாடு சம்பந்தமான விஷயங்கள் அலசப்பட்டன என்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் தூதரான டாக்டர் ஜெய்சங்கர் அவர்கள், இதற்கு முன்பாக பங்களாதேஷிற்கு இந்திய வெளியுறவுத்துறைச் செயலராகப் பயணம் மேற்கொண்டுள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சராகப் பதவியேற்றபின் அவர் மேற்கொண்ட இந்த முதல் பயணத்தில், பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ கே அப்துல் மோமென் அவர்களை முதலில் சந்தித்துப் பேசினார்.
இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு இடையே நடைபெற்ற இந்த சந்திப்பு சுமுகமான முறையில் அமைந்திருந்தது. இருதரப்பு, பாதுகாப்பு மற்றும் செயலுத்தி ஈடுபாடுகள் குறித்த விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. தற்போது நிலவும் சுமுகமான பரஸ்பர உறவுகளை புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்ல இருநாடுகளும் ஆர்வமாக உள்ளன. பரஸ்பரப் பிரச்சனைகளை இருநாடுகளும் பகிர்ந்து கொள்வதை இது எடுத்துக்காட்டுகிறது.
பங்களாதேஷ் மற்றும் இந்தியாவிற்கு இடையே உள்ள உறவுகள் செயலுத்திக் கூட்டாளித்துவத்தைத் தாண்டிய நிலையில் உள்ளது. இதற்கு முன்பு வெளியுறவுத் துறைச் செயலராகவும், தற்போது வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பங்களாதேஷ் நாட்டுடன் தாம் தொடர்பு கொண்டிருப்பதைப் பெருமைக்குரியதாகக் கருதுவதாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்கள் கூறினார்.
குற்றங்களுக்கும், பயங்கரவாதத்துக்கும் எதிராக, இருநாடுகளுக்குமிடையே உள்ள மேம்பட்ட கூட்டாளித்துவமானது, இரு நாட்டு மக்களுக்கும் நேரடியாகப் பயனளிக்கும் வகையில் உள்ளது என்று நம்புவதாக அவர் கூறினார். இது, சிக்கல் மிகுந்த ரோஹிங்கியா பிரச்சனையை இந்தியாவும், பங்களாதேஷும் எதிர்கொள்வதைக் குறிப்பிடும் வகையில் இருந்தது.
முன்னதாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருடனான தமது சந்திப்பின்போது, மற்ற விஷயங்களுக்கு இடையே, ரோஹிங்யா பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண்பதன் அவசியம் குறித்துப் பேச இருப்பதாக, பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். இப்பிரச்சனை, பிராந்திய ஸ்திரத்தன்மையை பாதிக்கக்கூடும் என்பதால் அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அவர் கூறினார்.
செய்தியாளர்களிடையே பேசுகையில், பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மோமென் அவர்களுடனான சந்திப்பு பலனளிக்கும் வகையில் அமைந்திருந்ததாக, டாக்டர் ஜெய்சங்கர் அவர்கள் குறிப்பிட்டார். ரோஹிங்யா அகதிகளைப் பத்திரமாகவும், விரைவாகவும் மியான்மருக்குத் திருப்பியனுப்ப இந்தியாவும் பங்களாதேஷும் ஒப்புக்கொண்டுள்ளதாக, அவர் கூறினார்.
ரோஹிங்கியர்களுக்கு எதிராக, மியான்மர் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக, சுமார் ஏழு லட்சம் ரோஹிங்யர்கள் நாட்டை விட்டு வெளியேறி, அதிகளவில் பங்களாதேஷில் தஞ்சமடைந்தனர். அவர்களை விரைவாக மியான்மர் நாட்டிற்குத் திருப்பியனுப்ப, இந்தியாவும், பங்களாதேஷும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்தியாவுக்கும், பங்களாதேஷிற்கும் இடையிலான உறவுகள், மற்ற தெற்காசிய நாடுகளும் பின்பற்றத் தகுந்த வகையில் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக, டாக்டர் ஜெய்சங்கர் அவர்கள் குறிப்பிட்டார். 2014 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் பதவி ஏற்றதைத் தொடர்ந்து, பல முன்முயற்சிகள் மூலம், இருநாட்டு உறவுகள் மேலும் விரிவடைந்துள்ளன. 2015 ஆம் வருடம், ஜூன் மாதம், மோதி அவர்கள் முதன்முறையாக பங்களாதேஷுக்குப் பயணம் மேற்கொண்டபோது, வரலாறு படைக்கும் வகையில், இருநாடுகளுக்கும் இடையிலான நில எல்லை ஒப்பந்தத்தை அமலாக்குவது என்ற முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் மூலம், 47 வருடங்களாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த நில எல்லைப் பிரச்சனை தீர்க்கப்பட்டது.
2017 ஆம் வருடம், ஏப்ரல் மாதம், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்கள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டபோது, பாதுகாப்பு, அணுசக்தி, இணையதளப் பாதுகாப்பு மற்றும் ஊடகங்கள் குறித்த 22 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. பங்களாதேஷில் துறைமுக மேம்படுத்துதல் மற்றும் 17 முன்னேற்றத் திட்டங்களுக்காக, 2015 ஆம் வருடம் 300 கோடி டாலர் அளவிலும், 2017 ஆம் வருடம் 450 கோடி டாலர் அளவிலும் கடனுதவியை இந்தியா, பங்களாதேஷுக்கு வழங்கியுள்ளது.
பிரதமர் ஷேக் ஹசீனா அவர்கள் இந்த வருடத்தில் மேற்கொள்ளவிருக்கும் இந்தியப் பயணத்தின்போது, 2020 ஆம் ஆண்டில் நிகழும், பங்களாதேஷின் தேசத்தந்தையான ஷேக் முஜிபூர் ரஹ்மான் அவர்களின் 100வது பிறந்தநாள் விழாக் கொண்டாட்டம், நினைவு கூரப்படும். பங்களாதேஷின் சுதந்திர போராட்டத்தில் இந்தியப் படைகள் முக்கியப் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் தற்சமயம், சிறந்த நிலையை எட்டியுள்ளன. தெற்காசியப் பிராந்தியம், தொடர்ந்து அமைதியுடனும், ஸ்திரத்தன்மையுடன் விளங்க, பங்களாதேஷ், வலுவுடனும், செழிப்புடனும் திகழ வேண்டும் என இந்தியா விரும்புகிறது.
Comments
Post a Comment