இருதரப்பு உறவுகளை வலுவாக்கும் பிரதமர் திரு நரேந்திர மோதியின் பூட்டான் பயணம்.
(பூட்டான் விவகாரங்கள் ஆய்வாளர் டாக்டர் நிஹார் ஆர் நாயக் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)
பூட்டான் பிரதமர் டாக்டர் லோட்டே ஷெரிங் அவர்களின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், பூட்டானுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அவருடன் உயர்நிலைக் குழுவும் பயணித்தது. பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்றபின் மோதி அவர்கள் பூட்டானுக்கு மேற்கொண்ட முதல் அரசுமுறைப் பயணமாகும் இது. கடந்த ஐந்தாண்டுகளில் அவர் மேற்கொண்ட இரண்டாவது பூட்டான் பயணமாகவும் இது அமைந்துள்ளது. இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றபின், மோதி அவர்கள் இலங்கைக்கும் மாலத்தீவுகளுக்கும் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் மூலம், அண்டைநாடுகளுக்கு முதலிடம் என்ற இந்தியாவின் கொள்கைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் வெளிப்படுகிறது.
காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச மேடைகளில் எடுத்துச் செல்ல பாகிஸ்தான் எடுக்கும் முயற்சிகளை முறியடிக்க தீவிர நடவடிக்கைகளில் இந்தியா இறங்கியுள்ள வேளையில், பிரதமரின் பூட்டான் பயணம் அமைந்துள்ளது. முன்னதாக, ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததைப் பாராட்டிய பூட்டான், இந்த நடவடிக்கை, மிகவும் துணிச்சலான, தொலைநோக்குப் பார்வையுடன் எடுக்கப்பட்ட, விவேகமான முடிவு என்று குறிப்பிட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீர் விவகாரம், முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதை பூட்டான் அங்கீகரித்துள்ளது.
இந்தியாவுடன் பூட்டான் கொண்டுள்ள சிறப்புமிக்க உறவுகளைப் பிரதிபலிக்கும் விதமாக, பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் இப்பயணத்துக்கு, பூட்டான் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. பூட்டான் பிரதமர் டாக்டர் ஷெரிங், மோதி அவர்களை விமான நிலையத்தில் வரவேற்றார். பூட்டன் அரசர் மற்றும் அரசியை பிரதமர் திரு நரேந்திர மோதி அவர்கள் சந்தித்தார். இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முதலிடம் என்ற கொள்கைக்கு அச்சாணியாக பூட்டான் விளங்குகிறது என்று பிரதமர் மோதி அவர்கள் குறிப்பிட்டார்.
உயர்நிலைக் குழுக்கள் அளவிலான பேச்சு வார்த்தைகளை இருநாட்டுப் பிரதமர்களும் மேற்கொண்டனர். அனைத்துத் துறைகளிலும், இருதரப்பு உறவுகளை மேலெடுத்துச் செல்வதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவரான டாக்டர் பேமா கியாம்ஷோ உள்ளிட்ட பல மூத்த அரசியல் தலைவர்களையும் மோதி அவர்கள் சந்தித்தார். பூட்டான் ராயல் பல்கலைக் கழக மாணவர்களிடையே பிரதமர் மோதி அவர்கள் உரையாற்றினார்.
இருநாடுகளுக்கும் இடையிலான உயர்மட்டப் பரிவர்த்தனைகளில் ஏற்பட்டுள்ள புதிய உத்வேகத்தை இப்பயணம் பிரதிபலிக்கிறது. முன்னதாக, 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், பூட்டான் பிரதமர் டாக்டர் ஷெரிங் அவர்கள், இந்தியாவுக்குத் தமது முதல் அயல்நாட்டுப் பயணத்தை மேற்கொண்டார். மோதி அவர்களின் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டவுடனேயே, வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கர் அவர்கள், பூட்டானுக்குத் தமது அரசு முறைப் பயணத்தை மேற்கொண்டார்.
இந்தியாவுக்கும், பூட்டானுக்குமிடையே, 1968 ஆம் ஆண்டு ராஜீய உறவுகள் துவங்கிய காலம் தொட்டே, விரிவடைந்து வரும் இந்தியா – பூட்டான் உறவுகள், தெற்காசியாவில் அண்டைநாட்டு உறவுகளின் மேன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. பரஸ்பர நம்பிக்கை, புரிதல் மற்றும் முதிர்ச்சியை இருநாட்டு உறவுகள் வெளிப்படுத்துகின்றன. 1949 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டு, பின்னர் 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் புதுப்பிக்கப்பட்ட இந்தியா – பூட்டான் நட்பு மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம், இருநாட்டு உறவுகளுக்கு முக்கியத் தூணாக விளங்குகிறது. இதன் மூலம், திறந்த எல்லை, பாதுகாப்பு ஒத்துழைப்பு, மக்களுக்கு இடையிலான உறவுகளை வளர்த்தல் போன்ற சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ள இந்த ஒப்பந்தம் உதவுகிறது. பொருளாதார வளர்ச்சி, ஜனநாயக மாண்புகளைப் பராமரித்தல், பிராந்திய அமைதி போன்ற விஷயங்களில் இருநாடுகளும் ஒன்றையொன்று சார்ந்துள்ளதோடு, தங்களை சமநிலையிலான கூட்டாளிகளாகவும் பாவிக்கின்றன.
நீர்வளம், வர்த்தகம், போக்குவரத்து, பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்பு, எல்லைப்புற மேலாண்மை போன்ற பல துறைகளில் இருநாடுகளுக்கும் இடையே அமைப்பு ரீதியிலான ஏற்பாடு இருந்து வருகிறது. பூட்டான் நாட்டு இறக்குமதியில் 82 சதவிகிதம் பங்கு பெற்றுள்ள இந்தியா, பூட்டானின் மிகப்பெரும் வர்த்தகக் கூட்டாளியாகவும் முதலீட்டு நாடாகவும் திகழ்கிறது. 2000 மெகாவாட் திறன் கொண்ட நான்கு நீர்மின்நிலையங்களை பூட்டானில் இந்தியா நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விண்வெளி ஆராய்ச்சி, மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தம், தொழில்நுட்பக் கல்வியில் ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. மங்டேச்சு நீர்மின்நிலையம் மற்றும் தெற்காசிய செயற்கைக் கோளின் புவி நிலையம் ஆகியவற்றை இருநாட்டுப் பிரதமர்களும் கூட்டாகத் திறந்து வைத்தனர். இந்தியாவின் ரூபே கார்டு பூட்டானில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவிலிருந்து பூட்டானுக்கு வழங்கப்படும் எரிவாயுவின் அளவு, எழுநூறிலிருந்து ஆயிரம் மில்லியன் டன்னாக அதிகரிக்கப்படும் என்று பிரதமர் மோதி அவர்கள் அறிவித்தார். சார்க் அமைப்பின் நாணயப் பரிவர்த்தனைக் கட்டமைப்பின் கீழ், பூட்டானுக்கு மேலும் 10 கோடி டாலர் வழங்கப்படும். பூட்டானில் நவீன, பல்துறை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்க வேண்டும் என்ற பூட்டான் பிரதமர் டாக்டர் ஷெரிங் அவர்களின் கனவை நனவாக்க, அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று, பிரதமர் மோதி அவர்கள் உறுதியளித்தார். மேலும், பருவநிலை மாற்றம், உள்கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு மற்றும் செயலுத்தி ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள், பூட்டானின் ஐந்தாண்டுத் திட்டத்திற்காக இந்தியா அளிக்கும் தொழில்நுட்ப, பொருளாதார உதவிகள் ஆகியவை குறித்து, இருநாட்டுப் பிரதமர்களும் விவாதித்தனர்.
Comments
Post a Comment