இந்தியாவில் கணிசமாக உயர்ந்துள்ள புலிகளின் எண்ணிக்கை.

(பத்திரிக்கையாளர் கே.வி.வெங்கடசுப்ரமணியன் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

இந்தியாவில் புலிகளின் கர்ஜனை, முன்னெப்போதுமில்லாத அளவில் அதிகரித்துள்ளது. இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3000 என்ற எண்ணிக்கையைத் தொட்டிருக்கிறது. இதனால், இந்தியா புலிகளின் பாதுகாப்புமிக்க சரணாலயமாக உருவெடுத்துள்ளது எனலாம். காடுகளில் கட்டுப்பாடின்றி சுதந்திரமாகத் திரியும் உலகப் புலிகளின் எண்ணிக்கையில், 75 சதவிகிதம் இந்தியாவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 2014 ஆம் ஆண்டில் 2,226 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, 33 சதவிகிதம் உயர்ந்து, 2018 ஆம் ஆண்டில் 2,967 என்ற எண்ணிக்கையைத் தொட்டுள்ளது.

நான்காண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்பட்டு வரும் கணக்கெடுப்புகளிலேயே, அதிகளவிலான கணக்கு தற்போது வெளிவந்துள்ளது. 2006 – 2010 ஆம் ஆண்டுகளில் 21 சதவிகிதமும், 2010 – 2104 ஆம் ஆண்டுகளில் 30 சதவிகிதமும் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அனைத்திந்திய புலிகள் கணக்கெடுப்பு, 2018 அறிக்கையின்படி, 2006 ஆம் ஆண்டுமுதலான சராசரியான புலிகளின் எண்ணிக்கை உயர்வை ஒத்தே தற்போதைய வளர்ச்சி நிகழ்ந்துள்ளது.

இந்தியாவிலேயே அதிகளவில், 526 புலிகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ளன. அதனைத் தொடர்ந்து, கர்நாடகாவில் 524 ம், உத்தராகண்டில் 442 ம் உள்ளன., தேசிய புலிகள் காப்பாணயம் மற்றும் மாநில வனத்துறைகளுடன் இணைந்து, இந்த அறிக்கையை இந்திய வனாந்திர நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தியாவில், நான்காண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் புலிகளின் கணக்கெடுப்பு நிகழ்கிறது. தற்போது எடுக்கப்பட்டது நான்காவது கணக்கெடுப்பாகும் முன்னதாக, 2006, 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சுழற்சிமுறைக் கணக்கெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.

புலிகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்க, மார்க் ரீகேப்சர் என்ற விஞ்ஞான முறைப்படி, இருமுறை மாதிரி எடுக்கும் அணுகுமுறை இந்தியாவில் கையாளப்பட்டு வருகிறது. 3,82,000 ச.கி.மீ. பரப்பளவிலான இந்திய வனப் பகுதிகளில் எடுக்கப்பட்ட இந்தக் கணக்கெடுப்பில், 1,30,000 ச.கி.மீ. பரப்பில் கேமராப் பொறிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இரண்டு பிரிவுகளாக, இந்தக் கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. முதல் மாதிரி, களத்தில் எடுக்கப்பட்ட தரவுகளை உள்ளடக்கியது. புலிகள் மிகுந்த 18 மாநிலங்களில் 40,000 களப் பணியாளர்கள் ஈடுபட்டனர். புலிகள் நடமாட்டம், வாழ்விடம், கூடவே இரையுண்ணும் விலங்குகள், பலியாகும் விலங்குகளின் அடிப்படை எண்ணிக்கை, மனித தாக்கம் உள்ளிட்ட பல விஷயங்களை களப்பணியாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர்.

இரண்டாவது பிரிவில், பயிற்சிபெற்ற வனவிலங்கு உயிரியல் நிபுணர்கள், காடுகளெங்கும் கேமராப் பொறிகளை நிறுவினர். புலிகளின் நடமாட்டம் மற்றும் பலியாகும் விலங்குகளின் எண்ணிக்கை குறித்த அனைத்துத் தகவல்களையும் அவர்கள் திரட்டினர். பின்னர் இந்தத் தரவுகள் அனைத்தும் டேராடூனிலுள்ள தேசிய வனாந்திர நிறுவனத்தில் ஆய்வு செய்யப்பட்டன.

இதுவரை நடைபெற்ற கணக்கெடுப்புக்களிலேயே, தொழில்நுட்ப ரீதியாக, மிகவும் தீவிரமான, நுட்மான முறையில் 2018 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. மற்ற கணக்கெடுப்புக்களை விடவும் அதிகத் துல்லியமான கணக்கெடுப்பாகவும் இது விளங்குகிறது. நவீன ஏண்ட்ராய்டு கைப்பேசி மற்றும் கணினி மென்பொருள் இந்தக் கணக்கெடுப்பில் பயனபடுத்தப்பட்டுள்ளன. கேமரா மூலமாகவும், நேர்முகமாகவும் பெறப்பட்ட தரவுகள் ஒருங்கிணைக்கப்பட்டன. 2006 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 9,000 கேமராக்களும், தற்போதைய கணக்கெடுப்பில் 15,000 கேமராக்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இத்தகைய நவீன தொழில்நுட்பங்களால், வலுவான அடிப்படையில் கணக்கெடுப்பு நிகழ்ந்துள்ளதாக, வனவிலங்கு உயிரியல் நிபுணர்கள் கூறுகின்றனர். கணக்கெடுப்பின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் விதமாக, 83 சதவிகித புலிகளின் எண்ணிக்கை கேமராப் பதிவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 17 சதவிகிதம், கேப்சர் – ரீகேப்சர் என்ற, அறிவியல் ரீதியிலான புள்ளிவிவர முறையைக் கொண்டு கணிக்கப்பட்டுள்ளது.

வனவிலங்கு உயிரியல் நிபுணர்களும் தங்கள் அணுகுமுறையை மாற்றியமைத்துக் கொண்டனர். அவர்கள், கேமராப் பதிவுகளை அதிகளவில் சார்ந்திருந்தனர். எண்ணப்பட்ட புலிகள் மீண்டும் இரண்டாவது முறை எண்ணப்படுவதைத் தவிர்க்க, தொழில்நுட்பம் உதவியுள்ளது. கேமராவில் பதிவான புலிகளின் கோடுகள், தனிப்பட்ட புலியை அடையாளம் காண உதவியுள்ளன. மனித கைரேகைகளைப் போன்றே, புலிகளின் உடலில் உள்ள கோடுகளும் தனித்துவமானவையாகும். உலக வனவிலங்கு கணக்கெடுப்புக்களிலேயே, இந்தியாவின் புலிகள் கணக்கெடுப்பு மிகவும் பிரம்மாண்டமானதாகும்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பிரகடனத்தில் நிர்ணயிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான இலக்கை நான்காண்டுகளுக்கு முன்னதாகவே இந்தியா எட்டியுள்ளது பெருமைக்குரிய விஷயமாகும். புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையை பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் சர்வதேச புலிகள் தினத்தன்று புதுதில்லியில் வெளியிட்டார். வளர்ச்சிக்கும், சுற்றுச்சூழலுக்கும் இடையே சமநிலையை இந்தியா கடைப்பிடிக்கும் என்று பிரதமர் கூறினார். இந்தியக் குடிமக்களுக்கான வீடுகளை மேலும் நிர்மாணிக்கும் அதேசமயம், விலங்குகளுக்கான தரமான வாழ்விடத்தையும் இந்தியா உருவாக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

அதிக வளர்ச்சி பெற்றுள்ள புலிகளின் எண்ணிக்கையால், வனச்சுற்றுலா அதிகரிக்கும் அது இந்தியப் பொருளாதார வளச்சியை ஊக்குவிக்கும் விதமாக அமையும். தவிர, சுற்றுச்சூழல் சார்ந்த சுற்றுலாத்துறையின் வளர்ச்சி, உள்ளூர் சமுதாயங்களுக்கு அதிகப்பலன்களை அள்ளி வழங்கும் என்றால் அது மிகையல்ல.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.