இந்திய உதவியுடன் கட்டப்பட்ட முதல் மாதிரி கிராமம் - இலங்கையில் துவக்கம்.
(ஐடி.எஸ்.ஏ ஆய்வாளர், டாக்டர். குல்பின் சுல்தானா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஸ்ரீபிரியா சம்பத்குமார்.)
இலங்கை அரசு வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் மாதிரி கிராமத் திட்டத்தின் கீழ், இந்திய அரசின் உதவியுடன் கம்பாஹா மாவட்டத்தில் கட்டப்பட்ட முதல் மாதிரி கிராமம், இம்மாதம் ஆறாம் தேதி திறந்து வைக்கப்பட்டது. துவக்க விழாவிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்ச்சியில், நிறைவடைந்த வீடுகள் பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டன. இலங்கையின் வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் திரு. சஜித் பிரேமதாசா, முன்னாள் இலங்கை அதிபர் திருமதி. சந்திரிகா பண்டாரநாயகே குமாரதுங்கா மற்றும் இந்தியத் தூதரக உயர் ஆணையர் டாக்டர். ஷில்பக் ஆம்புலே மற்றும் பல அரசியல்வாதிகளும் உயர் அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
இந்திய அரசு, இலங்கையின் வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சகத்துடன் இணைந்து, 120 கோடி இலங்கை ரூபாய்க்கான நிதி உதவியுடன், இலங்கை முழுவதும் 2400 வீடுகளைக் கொண்ட 100 மாதிரி கிராமங்களைக் கட்டுவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. இந்தத் பணித்திட்டத்தின் ஓர் அங்கமாக, 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி, இந்தியாவும் இலங்கையும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. 60 கோடி இலங்கை ரூபாய்க்கான இந்திய நிதி உதவியுடன், கிராம சக்தி வீட்டு வசதி பணித்திட்டத்தின் கீழ், இலங்கையின் தெற்கு மாகாணத்தில் 600 வீடுகளைக் கட்டவும் இலங்கையின் 25 மாவட்டங்களில் மாதிரி கிராம வீட்டுவாதி பணித்திட்டத்தின் கீழ் 600 வீடுகளைக் கட்டவும் ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
இந்திய அரசின் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன், உரிமையாளரால் இயக்கப்படும் மாதிரியைப் பயன்படுத்தி, வீடுகள் கட்டபட்டு வருகின்றன. குறைந்த வருமானம் உள்ளவர்கள், நிலமற்றோர் மற்றும் ஏற்கனவே வீடில்லா பயனாளிகளுக்கு, வீடுகளின் கட்டுமானக் கட்டங்களுக்கு ஏற்ப, ஐந்து தவணைகளில் 5 லட்சம் இலங்கை ரூப்பாய்க்கான நிதி உதவி அளிக்கப்படுகின்றது. ஏற்கனவே இருந்த சில வீட்டுவசதித் திட்டங்களுடன் இந்தத் திட்டங்களையும் இந்தியா செயல்படுத்த உள்ளது. உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உள்ள மக்களுக்காக 50000 வீடுகளையும், தோட்டத் துறை, பயிரிடும் துறையில் உள்ள பயனாளிகளுக்காக 10000 வீடுகளையும் கட்டித் தருவதற்கான பணியிலும் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முறையே ஜூன் 2010 மற்றும் மே 2017 –ல் கையெழுத்தாயின.
இதைத் தவிர, இந்தியாவும் இலங்கையும் 2017 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி, 153 வீடுகள், ஒரு பல்நோக்கு சமூகக் கட்டிடம் மற்றும் சிறு தர்ம மண்டபம், உள்பகுதி நீர் வழங்கல் அமைப்பு, அனுராதபுராவின் சோபிதா தேரோ கிராமத்திலுள்ள துறவிகளின் இருப்பிடம் மற்றும் நூலக சீரமைப்பு ஆகியவை, 30 கோடி இலங்கை ரூபாய்க்கான இந்திய நிதி உதவியுடன் செய்து முடிக்கப்படும். வெளிநாடுகளில், இலங்கையில்தான், இந்தியா மிகப்பெரிய வீட்டுவசதி நிதி உதவி பணித்திட்டத்தை செயல்படுத்துகின்றது என, இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் தரஞ்சித் சிங் சாந்து தெரிவித்துள்ளார்.
தற்போது செயல்பாட்டிலிருக்கும் வீட்டு வசதி பணித்திட்டம் தவிர, 70-க்கும் மேலான மக்களுக்கான பணித்திட்டங்களை, சுகாதாரம், கல்வி, திறன் வளர்ச்சி, உள்கட்டமைப்பு, தொழில்முறைப் பயிற்சி போன்ற துறைகளில் இந்தியா மேற்கொண்டுள்ளது. இலங்கையில், இந்தியாவின் மொத்த வளர்ச்சி நிதி உதவியின் அளவு சுமார் 300 கோடி டாலராகும். இதில் 56 கோடி டாலர் மானியமாக வழங்கப்படுகின்றது.
இலங்கையில் இந்தியாவின் உதவியுடன் செயல்முறையில் உள்ள பணித்திட்டங்கள் அனைத்தும் அந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உள்ள தமிழர்களுக்காக மட்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்ற தவறான புரிதல் பல காலங்களுக்கு இருந்தது. அங்கு போர் முடிந்த உடனேயே, போரால் பாதிக்கப்பட்ட இடங்களில், நிவாரணப் பணிகள், புனர்வாழ்வு மற்றும் சீரமைப்புப் பணிகளில் உதவுவதற்கான உறுதியை இந்திய அரசு, இலங்கை அரசுக்கு அளித்தது. இதன் விளைவாக, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை நோக்கியே, வளர்ச்சிப் பணிகளில் இந்தியாவின் பெரும் பங்கு இருந்தது. ஆனால், அவை, இந்தப் பகுதிகளுக்கு மட்டும்தான் என வரையறுக்கப்படவில்லை. இலங்கை அரசு அதிகாரிகளின் தேவை மற்றும் வேண்டுகோளிற்கேற்ப, இந்தியா தன் உதவிகளைச் செய்து வருகிறது. இந்திய உதவியின் கீழ், அங்கு, நாடு முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கும் 1990 இலவச அவசரகால ஆம்புலன்ஸ் சேவை பற்றி, குறிப்பிட்டுக் கூற வேண்டும். இந்த வசதி முதலில் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் துவக்கப்பட்டது. இதற்குக் கிடைத்த நல்ல வரவேற்பைக் கண்டு, இலங்கை அரசு இந்தச் சேவையை நாடு முழுவதற்கும் விரிவுபடுத்துமாறு இந்தியாவைக் கேட்டுக் கொண்டது. இதற்கு இந்திய அரசும் உடனே இசைவு தெரிவித்தது. இலங்கையில் ரயில்வே துறையின் வளர்ச்சிக்காக, இந்தியா 130 கோடி டாலர் கடனுதவி செய்ய ஒப்புக்கொண்டுள்ளது
குறிப்பிட்ட நேரத்தில் நிறைவடைவதில்லை என்ற குற்றச்சாட்டு, அவ்வப்போது இந்திய பணித்திட்டங்கள் மீது வருவதுண்டு. இந்தக் குறையை நீக்க, சிறிய வளர்ச்சிப் பணித்திட்டங்களை நடைமுறைப்படுத்த, இலங்கை அரசுடன் போடப்பட்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், இந்திய உதவி பெற்ற பணித்திட்டங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.. இந்த கட்டமைப்பின் மூலம், மொத்த நடைமுறைச் செயல்முறையும் இன்னும் துல்லியமாக்கப்படுகின்றது. இந்திய அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள பல பணித்திட்டங்கள் தற்போது சரியான நேரத்தில் நிறைவடைகின்றன, சில நேரங்களில், குறிப்பிட்ட சமயத்திற்கு முன்னரே நிறைவுபெற்று விடுகின்றன.
Comments
Post a Comment