மத்திய பட்ஜெட்டில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.
(பேராசிரியர் டாக்டர் லேகா சக்கரவர்த்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)
2019 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், பொருளாதார வளர்ச்சிக்கு வலு சேர்ப்பது முக்கியமாக கவனத்தில் கொள்ளப்படும். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க, நிதி பலப்படுத்துதல் என்ற கொள்கையை விட்டு விலகிச் செல்வது அவசியமகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதத்திற்குள் நிதிப் பற்றாக்குறையை அடக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தின்படி நடப்பது தற்போதைய சூழலில் சாத்தியமற்றது. ஏனெனில், பொருளாதாரத்தை மீண்டும் முன்புபோல் வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்ல, பொது முதலீடுகள், குறிப்பாக, மூலதன உள்கட்டமைப்பில், இன்றியமையாததாக விளங்குகிறது. நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் வழங்க இருக்கும் முதல் பட்ஜெட் உரையில் அறிவிக்கும் துணிச்சலான முன்னெடுப்புக்களுள் ஒன்றாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செலவினங்களைக் குறைப்பதன் மூலம், நிதி பலப்படுத்தப்பட்டால், பொருளாதார வளர்ச்சியை அது வெகுவாக பாதிக்கக்கூடும். வரி வருவாய் அதிகரிப்பு, சரியான வரி சீரமைப்புக்களின் மூலமே சாத்தியமாகும். இந்த பட்ஜெட்டில், வளர்ச்சியை ஊக்குவிக்க, பெருநிறுவனங்களுக்கான வரிவிகிதங்களில் மாற்றங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற பட்ஜெட்டில், பெருநிறுவனங்களுக்கான வரி 25 சதமாகக் குறைக்கப்பட்டாலும், அது சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கே அறிவிக்கப்பட்டது. செலவினங்களில், விவசாயிகளுக்கும், பெண்களுக்குமான திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. எனினும், அத்தகைய திட்ட அறிவிப்புக்களுக்குப் பின்புலமாக, தேவையான ஒதுக்கீடு அளிப்பது மிகவும் முக்கியமானது.
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் இலக்கில் அரசு உறுதியாக உள்ளது. பிரதமர் தலைமையிலான, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2019 – 20 ஆம் ஆண்டில் அனைத்து கரீஃப் பருவப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச கொள்முதல் விலையை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, சோயாபீன் விலை குவிண்டாலுக்கு ரூ.311, சூரியகாந்தி எண்ணெய்வித்து குவிண்டாலுக்கு 262, எள் குவிண்டாலுக்கு ரூ.366 என்ற அளவில், குறைந்தபட்ச கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயத்துறையில் முதலீடுகளும் உற்பத்தியும் அதிகரிக்கும்.
இந்தியாவின் பெரும் பொருளாதாரக் கட்டமைப்பு குறித்து, வரும் பட்ஜெட்டில் மேலும் தெளிவு படுத்தப்படும். பற்றாக்குறையை ஈடுகட்ட, வரிகள் நீங்கலான பிரிவில், ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரித் தொகையை அரசுக்கு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த மேலும் தெளிவுநிலை வரும் பட்ஜெட்டில் வெளிப்படும்.
வேலைவாய்ப்பை அதிகரிக்கும் விதத்திலோ, நிதி உள்ளடக்கல் மூலம் குறைந்தபட்ச வருவாயை அதிகரிக்கும் விதத்திலோ பட்ஜெட் அறிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீர் ஆதாரம், சுகாதாரம், குறைந்த வருவாயுள்ள மகளிருக்குத் தூய எரிசக்தி அளித்தல் போன்ற சமூகக் கட்டமைப்புக்களின்மீது அரசு அதிக கவனம் செலுத்துவது வரவேற்கத்தக்கது. எனினும், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பிற சமூகத் திட்டங்களுக்கு செலவினங்கள் கணிசமான அளவில் அதிகரிக்கப்பட வேண்டும். மனிதவள மூலதனத்தில், குறிப்பாக, உடல்நலம் மற்றும் கல்வித் துறைகளில், அரசின் பங்களிப்பு குறித்து இந்த பட்ஜெட்டில் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய ஊட்டச்சத்துத் திட்டத்தை வலுப்படுத்தும் அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பருவநிலை மாற்றங்கள் குறித்தும் பட்ஜெட் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் யுக்திகள் குறித்து அறிவிக்கப்படுவது வரவேற்கத்தக்கது.
தொழில்முனைவை எளிதாக்குவதை ஊக்குவித்து, வளர்ச்சிக்குப் புத்துயிர் அளிக்க, கட்டமைப்பு சீர்திருத்தங்கள் அவசியம். நிதிக் கொள்கைக்கான குழு, வரிவிகிதங்களைக் குறைத்துள்ள நிலையில், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அது சென்றடைவதை உறுதி செய்தால், பொருளாதாரத்தில் நுகர்வு ஊக்குவிக்கப்படும்.
வளர்ச்சியை உறுதி செய்வதால், உள்கட்டமைப்புக்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும். மோதி அவர்களின் இரண்டாவது சகாப்தத்தில், “ஒருவர் கூட விடுபடக்கூடாது” என்பது தாரக மந்திரமாக விளங்குகிறது.
அமெரிக்க, சீன வர்த்தகப் போர், கச்சா எண்ணெய் விலையில் ஏற்றத்தாழ்வுகள், பணவீக்கம் ஆகிய சவால்களால் உலகம் கொந்தளிப்பில் உள்ள நிலையில், அவற்றை உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சிக்கு எந்த வகையில் பயன்படுத்தலாம் என்பதில் நிதியமைச்சர் கவனம் செலுத்துவார்.
Comments
Post a Comment