ரஷ்யா – இந்தியா - சீனா முத்தரப்பு சந்திப்பு.



(சீன விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ராஜ்தீப் பகநதி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஆ.வெங்கடேசன்.)

ஜப்பான் நாட்டில் ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இடையே, சீன அதிபர் ஷீ ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் முத்தரப்பு சந்திப்பு நிகழ்த்தினார். அமெரிக்காவிடமிருந்து ரஷ்யா, தடைகள் மூலமாகவும், சீனா, கட்டணங்கள் மூலமாகவும், அதிகப்படியான அழுத்தங்களை எதிர் கொண்டு வரும் நிலையில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா (ஆர்ஐசி) முத்தரப்பு சந்திப்பு ஏற்பட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தற்போதைய சர்வதேச அமைப்பை முன்னெடுத்துச் செல்ல, இந்த மூன்று நாடுகளும் ஒன்றிணைந்துள்ளன. இது, நீண்டகால நலன்களுக்குக் கணிசமான அளவில் உதவிகரமாக விளங்கும்.

2003-ஆம் ஆண்டிலிருந்து ஆர்ஐசி நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கு இடையே ஈடுபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 2006 ஆம் வருடம் ஆர்ஐசி நாடுகளின் தலைவர்களுக்கிடையிலான முதல் சந்திப்பு ஏற்பட்டது. அப்போதைய சீன அதிபர் ஹு ஜிண்டாவ், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் முன்னாள் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஆகியோர் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற ஜி-8 மாநாட்டின் முடிவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

2018 ஆம் வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற சந்திப்பிற்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோதி, சீன அதிபர் ஷீ ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகியோருக்கிடையே நடைபெற்றுள்ள தற்போதைய சந்திப்பின் மூலம், பரஸ்பரத் தொடர்புகள் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன என்று தெரிகிறது. இந்த வருடம் செப்டம்பர் மாதம் , ரஷ்யாவின் விளாடிவாஸ்டாக் நகரில் நடைபெறவுள்ள கிழக்கு பொருளாதார மன்றக் கூட்டத்திற்கிடையே இந்த மூன்று தலைவர்களும் மீண்டும் சந்திக்க உள்ளனர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சந்திப்புக்கள், இந்த மூன்று நாடுகளின் அவசரத் தேவையை வெளிப்படுத்துவதாக உள்ளன. வளர்ந்து வரும் பொருளாதார தற்காப்பு மற்றும் தன்னிச்சையான செயல்பாடுகள், உலகப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையைப் பாதிப்பதோடு, வளர்ச்சியிலும் பின்னடைவை ஏற்படுத்துகின்றன. வளர்ந்து வரும் சந்தைகளையும், நாடுகளையும் எதிர்மறையாகப் பாதிக்கின்றன.

தவிர, இந்த மூன்று நாட்டு தலைவர்களுக்கிடையே, நம்பிக்கை மற்றும் புரிதலை ஏற்படுத்துவதற்கு இந்த சந்திப்புகள் சிறந்த வாய்ப்பை ஏற்படுத்துகின்றன. அனைத்து விதமான பொதுவான நலன்கள் குறித்த விஷயங்களில் செயலுத்தித் தொடர்புகளை, சிறந்த ஆலோசனைகள் மூலம் வலுப்படுத்த, இதுபோன்ற சந்திப்புகள் வாய்ப்பை ஏற்படுத்துகின்றன.

சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்கொள்வது, மூன்று நாடுகளுக்கிடையே வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவது, முக்கிய சர்வதேசப் பிரச்சனைகள், பருவநிலை மாற்றம் போன்றவை இந்த ஒசாகா முத்தரப்பு சந்திப்பின் பேச்சுவார்த்தையில் இடம் பெற்றன. பயங்கரவாதம் குறித்த சர்வதேச மாநாட்டை ஏற்படுத்த, அதிபர் ஷீ ஜின்பிங் மற்றும் அதிபர் புடின் ஆகியோரின் உதவியை பிரதமர் மோதி அவர்கள் நாடினார். பயங்கரவாதத்தை எதிர்கொள்ள பல்நிலை ஒப்பந்தங்கள் ஏற்பட்டிருந்தாலும், பயங்கரவாதத்தை வரையறுக்க எந்த ஒரு சர்வதேச மாநாடும் இதுவரை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின் போது சர்வதேச பயங்கரவாதம் விடுக்கும் சவால்கள் முக்கியமாக விவாதிக்கப்பட்டு, பயங்கரவாதத்தை எதிர்கொள்ள பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பயங்கரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் வலுவான நடவடிக்கைகளை எடுப்பதை உறுதி செய்ய, நிதி நடவடிக்கைப் பணிக்குழு, எஃப்ஏடிஎஃப், தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என இந்தியா நம்புகிறது. பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுவதால் சர்வதேச பயங்கரவாதம் அதிகரித்து வருவதை எஃப்ஏடிஎஃப், அண்மையில், தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

சீனாவின் கண்ணோட்டத்தில், இந்த சந்திப்பு யூரேஷியாவின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும். அதேசமயம், இருதரப்பு உறவுகளில் சிறந்த தாக்கத்தையும் இந்த முத்தரப்பு சந்திப்பு ஏற்படுத்தும். இந்தியா மற்றும் ரஷ்யா உடனான சீன உறவுகள், சிறந்த வளர்ச்சி வேகத்தை அடைந்துள்ளன என்று, சீனாவின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் ஸேங் ஜுன் அவர்கள் கூறியுள்ளார். மூன்று நாடுகளின் தலைவர்களும் நெருக்கமான பரிமாற்றங்களையும் செய்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். முக்கிய சர்வதேச விவகாரங்களில் இந்த மூன்று நாடுகளும் தங்கள் ஒருங்கிணைப்பை வலுவாக்குவது முக்கியம் என்று கூறிய அவர், சர்வதேச வர்த்தகத்தில் பல்நிலைத்தன்மைக்கு ஆதரவு அளிப்பதிலும், வர்த்தகத் தற்காப்பு செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதிலும் இணைந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

ரஷ்யாவின் நிலைப்பாட்டைப் பொறுத்தவரை, அனைத்துத் துறைகளிலும் ரஷ்யாவை சீனா முந்திச் செல்லும் இந்த வேளையில், சர்வதேச அரசியலில் தாக்கத்தை விரிவுபடுத்த ஆர்ஐசி உதவிகரமாக உள்ளது. உலக புவி அரசியல் மற்றும் புவி பொருளாதாரத்தில், அமெரிக்காவை விடுத்து, தன்னிச்சையாக இந்தியா செயல்பட வேண்டும் என, ரஷ்யாவும், சீனாவும் விரும்புகின்றன என்பது வெளிப்படை.

ஒசாகா நகரில் ஆர்ஐசி சந்திப்பு நடைபெற்ற அதே வேளையில், ஜெய் எனப்படும் ஜப்பான், அமெரிக்கா மற்றும் இந்தியா முத்தரப்பு சந்திப்பும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அரசியலில் உள்ள கொந்தளிப்புகளுக்கு இடையே பயணிக்க, இந்தியா மேற்கொள்ளும் பல்சீரமைப்பு செயலுத்திகளில், இந்த முத்தரப்பு சந்திப்புகளும் அங்கம் வகிக்கின்றன என்பது இதன்மூலம் விளங்குகிறது.




















Comments