இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையில் வலுப்பெறும் பாதுகாப்புக் கூட்டுறவு

(மத்திய ஆசியாவிற்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் அதர் ஸஃபர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஸ்ரீபிரியா சம்பத்குமார்.)

இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையில், பயங்கரவாத எதிர்ப்பிற்கான கூட்டுப் பணிக் குழுவின் எட்டாவது சந்திப்பு புது தில்லியில் நடைபெற்றது. இருதரப்பிலிருந்து இந்த சந்திப்பில் கலந்துகொண்ட அதிகாரிகள், எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் அவரவர் பகுதிகளிலும் உலகின் மற்ற பாகங்களிலும் இயங்கிக்கொண்டிருக்கும் பயங்கரவாதக் குழுக்கள் ஆகியவற்றால் உண்டாகும் அச்சுறுத்தல்களைப் பற்றி ஆராய்ந்தனர். பயங்கரவாத எதிர்ப்பில் நாடுகள் சந்திக்கும் சவால்கள், தீவிரவாதத்திற்கான தீர்வு, பயங்கரவாத நிதி உதவிகளை தடுக்கும் முறைகள், பயங்கரவாதச் செயல்களுக்கு இணையதளப் பயன்பாட்டைத் தடுக்கும் முறைகள், நாடு திரும்பும் வெளிநாட்டு பயங்கரவாதிகளைக் கையாளும் முறைகள் ஆகியவை குறித்த தங்கள் கருத்துக்களையும் இரு தரப்பினரும் பரிமாறிக் கொண்டனர். தகவல் பரிமாற்றம், திறன் வளர்ச்சி மற்றும் சிறந்த பழக்க முறைகளுக்கான பரிமாற்றம் ஆகியவை மூலம் பயங்கரவாத எதிர்ப்பு சார்ந்த நடவடிக்கைகளில் இருதரப்புக் கூட்டுறவை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் பற்றியும் அதிகாரிகள் கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பில், ஐக்கிய நாடுகள் சபை, எஸ்.சி.ஓ எனப்படும் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்புக் கட்டமைப்பு மற்றும் பண மோசடி மற்றும் பயங்கரவாத நிதி உதவிகளைத் தடுப்பதற்கான யூரேசியக் குழுமம் உட்பட, பலதரப்பட்ட தடங்களில் கூட்டுறவு பற்றியும் விவாதிக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு முதல், இந்தியா எஸ்.சி.ஓ-வின் முழு உறுப்பினராக உள்ளது. கடந்த மாதம், கிரிகிஸ்தானின் பிஷ்கெக்கில் இந்த அமைப்பின் 19 ஆவது உச்சிமாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், எஸ்.சி.ஓ-வின் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்புக் கட்டமைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் திறம்படப் பயன்படுத்தப்பட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

பாதுகாப்பு கூட்டுறவுடன், அரசியல் மற்றும் பொருளாதார இணைப்புகளையும் இந்தியாவும் உஸ்பெகிஸ்தானும் அதிகரித்துள்ளன. செழுமையான நாகரிக மற்றும் கலாச்சார பின்புலத்தைக் கொண்டுள்ள இரு நாடுகளுக்கும் இணைப்புக்களை ஆயிரமாண்டு காலமாக இருநாடுகளும் பெற்றுள்ளன. தற்போது, இரு நாடுகளும் தங்களது பொருளாதாரக் கூட்டுறவை விரிவுபடுத்தி வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இரு நாட்டு அரசியலின் உயர்மட்ட அதிகாரிகளுக்கிடையில் தொடர்ந்து சந்திப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. 2015 ஆம் ஆண்டு, தனது மத்திய ஆசிய பயணத்தின் போது, பிரதமர் மோதி அவர்கள் உஸ்பெகிஸ்தானிற்கும் பயணம் மேற்கொண்டார். 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல், உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷௌகாத் மிர்ஸியோயேவ் அவர்கள் இரு முறை இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இருதரப்பு மற்றும் பிராந்திய நிலைகளில் கூட்டுறவை மேம்படுத்துவது இந்தப் பயணங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்ட அவர், துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள, ஜனவரி 2019-ல் மீண்டும் இந்தியா வந்தார். இந்த நிகழ்ச்சிக்கு, ஒரு பெரிய உயர் மட்ட பிரதிநிதிக்குழுவுடன் கலந்துகொண்ட உஸ்பெகிஸ்தான் அதிபர், அப்போது இந்தியப் பிரதமரையும் சந்தித்தார்.

உஸ்பெகிஸ்தானின் மக்கள்தொகை மற்றும் புவியியல் அமைப்பின் காரணமாக, அந்நாடு, மத்திய ஆசியாவில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக உள்ளது. 3.3 கோடி என்ற மக்கள்தொகையோடு, இந்தப் பிராந்தியத்திலேயே அதிக மக்கள்தொகைக் கொண்ட நாடாக உஸ்பெகிஸ்தான் விளங்குகிறது. நிலத்தால் சூழப்பட்டுள்ள மத்திய ஆசியாவின் நடுவில் உஸ்பெகிஸ்தான் இருந்தாலும், இந்தப் பகுதியில், மற்ற அனைத்து குடியரசு நாடுகளுடனும், ஆஃப்கானிஸ்தானுடனும் தன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் ஒரே நாடாக உஸ்பெகிஸ்தான் இருக்கிறது. இந்தியாவின் செயலுத்திக் கூட்டாளியாக இருக்கும் உஸ்பெகிஸ்தான், மத்திய ஆசியப் பகுதியுடனான இந்தியாவின் உறவுகளுக்கு உதவும் முக்கிய நாடாகவும் உள்ளது. இந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு, ஆஃப்கானிஸ்தானில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் மிக முக்கியம் என்ற ஒரே கருத்தை இந்தியாவும் உஸ்பெகிஸ்தானும் கொண்டுள்ளன. இவ்வாண்டு ஜனவரி மாதம், முதல் இந்திய-மத்திய ஆசிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மட்ட பேச்சுவார்த்தைகள் உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல துறைகளில், துடிப்பான அரசியல் உறவுகளும், பல துறைகளின் விரிவாகிக் கொண்டிருக்கும் கூட்டுறவும் உள்ள போதிலும், இந்தியா உஸ்பெகிஸ்தான் இடையிலான இருதரப்பு வர்த்தகம், அதன் சாதியக்கூறுகளை விடக் குறைந்த அளவிலேயே உள்ளது. இந்திய வர்த்தக அமைச்சகத் தரவுகளின் படி, 2018-19 ஆம் ஆண்டுகளில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தின் அளவு 32.814 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது. எனினும், கடந்த 2-3 ஆண்டுகளில், வர்த்ததகம் துரிதமாக வளர்ந்துள்ளது என்பது ஒரு ஆக்கப்பூர்வமான விஷயமாகும். முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும், 2018-19 ஆம் ஆண்டில் 40 சதவிகிதமும் 2017-18 ஆம் ஆண்டில் 50 சதவிகிதமும் வர்த்தகம் வளர்ந்துள்ளது. 2020 ஆம் ஆண்டிற்குள், இருதரப்பு வர்த்தகம் 100 கோடி டாலர் என்ற அளவை எட்ட வேண்டும் என்பதை இரு நாடுகளும் இலக்காகக் கொண்டுள்ளன.

உஸ்பெகிஸ்தானிற்கு இந்தியா 20 கோடி டாலர் அளவிலான கடனுதவியை அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் அதிகப்படியான பொருளாதார சாத்தியக்கூறுகள் உள்ளன. உஸ்பெகிஸ்தான் தனது சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும், தகவல் தொழில்நுட்பம், கல்வி, மருந்துத்துறை, சுகாதாரம், விவசாயத் துறைகள் மற்றும் சுற்றுலாத் துறைகளிலும் இந்திய முதலீடுகளைப் பெற முயல்கிறது. நில மற்றும் கடல் மார்க்கங்களில், மத்திய ஆசியாவிற்கு நேரடி இணைப்பு வசதிகள் இல்லாதது, இருதரப்புப் பொருளாதார நடவடிக்கைகளைப் பாதிக்கின்றது. பல்வேறு பலதரப்பு முயற்சிகள் மூலம், இந்தியாவும் உஸ்பெகிஸ்தானும் இணைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்து வருகின்றன. உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஓமன் மற்றும் ஈரான் இடையிலான அஷ்கபாத் போக்குவரத்து உடன்பாட்டில் இந்தியாவும் இணைந்துள்ளது. ஈரானின் சபஹர் துறைமுகத்திலும் இந்தியா முதலீடு செய்து வருகிறது. ஐ.என்.எஸ்.டி.சி எனப்படும் சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழிப்பாதை, ஆஃப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவுடன் இந்தியாவின் தொடர்புகளை எளிதாக்கவல்ல மற்றொரு பலதரப்பு முயற்சியாகும்.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.