ஊடகங்களை நெருக்கும் பாகிஸ்தான்.

(ஆஃப்கான் – பாகிஸ்தான் விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஸ்மிதா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)

கேலிக்கூத்தாக விளங்கும் பாகிஸ்தான் ஜனநாயகத்தில், அரசு நிர்வாகத்திற்கும், ஊடகங்களுக்கும் இடையில் உரசல்களுடன் கூடிய உறவு நீடித்து வந்துள்ளது. பாகிஸ்தானில் சுதந்திரமான, துடிப்பான ஊடகங்கள் செயல்படுவதாக ஒருபுறம் பெயரளவில் கூறிக்கொண்டே, பாக் நிர்வாகம் அடிக்கடி, ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து, நெருக்கடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி நடைபெற்று வந்த காலத்தில் மட்டுமல்லாது, சிவிலியன் நிர்வாகத்தின் கீழும் ஊடகங்களின் குரல்வளை நெறிக்கப்படுகிறது என்பது பாகிஸ்தான் ஆட்சி வரலாறு தெரிவிக்கும் உண்மை நிலையாகும். குற்றம் சாட்டப்பட்டுள்ள, அல்லது தண்டனை அனுபவிக்கும் அரசியல்வாதிகளை ஊடகங்கள் நேர்காணலில் சந்திக்க, அண்மையில் இம்ரான்கான் அரசு தடை விதித்துள்ளது. பாகிஸ்தானின் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையத்திற்கு, தமது கடமையை நிறைவேற்றுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக, செய்தி டிவி சேனல்களான சேனல் 24, அப்தக் நியூஸ் மற்றும் கேபிடல் டிவி ஆகியவற்றின் ஒளிபரப்பு தடை செய்யப்பட்டது. அதற்குக் காரணம், அந்த செய்தி சேனல்கள், முன்னாள் பாக் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அவர்களின் மகளான மர்யம் நவாஸின் அதிரடிப் பேட்டி ஒன்றை ஒளிபரப்பியது தான். அந்தப் பேட்டியில், ஓராண்டுக்கு முன்னர், தனது தந்தையை ஊழல் குற்றச்சாட்டில் தண்டனையளித்துத் தீர்ப்பளித்த நீதிபதி மிரட்டப்பட்டதாக சில ஆதரங்களையும் அவர் வெளியிட்டார். அந்த நீதிபதி இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். பாகிஸ்தான் ஊடக ஒழுங்குமுறை ஆணையம், இந்த டிவி சேனல்களுக்கு, செய்தியாளர் கூட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்தமைக்காக நோட்டீஸ் அனுப்பியது. இந்த சேனல்களின் ஒளிபரப்பு தடைப்பட்டதற்கு தொழில்நுட்பக் காரணங்கள் நிலவியதாக பாக் நிர்வாகம் கூறினாலும், அது அப்பட்டமான ஊடகத் தணிக்கை என்று மற்றவர்கள் விவரித்துள்ளனர்.

பெம்ரா எனப்படும் பாகிஸ்தானின் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையத்தின் சட்ட விதிகள், ஊடகங்கள் கையாளும் விஷயம் குறித்தே கட்டுப்பாடுகளை விவரிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களைப் பற்றிய ஊடக செயல்பாட்டிற்கு அல்ல. பதிவு பெற்ற ஒரு ஊடக நிறுவனம், நடுநிலையாக செயல்படவும், ஆபாசாமான, இஸ்லாத்துக்கு எதிரான, வன்முறையைத் தூண்டக்கூடிய, நீதித்துறை மற்றும் ராணுவத்துக்கு எதிரான செய்திகளை வெளியிடாமல் இருப்பதை உறுதி செய்யவும் இந்த அமைப்பு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள விஷயங்களை அலசி ஆராய ஊடகங்களுக்கு சட்ட ரீதியாகத் தடை விதிக்கப்படுகிறது. எனினும், குற்றம் சாட்டப்பட்டுள்ள, அல்லது தண்டனை அனுபவிக்கும் அரசியல்வாதிகளை ஊடகங்கள் நேர்காணலில் சந்திக்கத் தடை விதிக்கப்படுவதும், அது குறித்த ஊடக செய்திகள் உண்மைத் தகவல்களின் அடிப்படையில் இருந்தாலும் தடை விதிக்கப்படுவதும், பேச்சு சுதந்திரத்துக்கும், மக்களின் தகவல் பெறும் உரிமைக்கும் முரணானதாகும்.

ஆட்சியிலுள்ள அரசுக்கு எதிராகவோ, ராணுவத்துக்கு எதிராகவோ செய்திகளை வெளியிடும் பத்திரிக்கையாளர்களும், உரிமைக் குழுக்களும், அரசுத் தரப்பிலிருந்து இடையூறுகளை சந்தித்தன. ராணுவக் கொள்கைகளுக்கு எதிரான செய்திகளை வெளியிடக்கூடாதென ஊடகங்களுக்கு அண்மையில் சில ஆண்டுகளாக அழுத்தம் கொடுக்கப்பட்டது.

பாகிஸ்தானில் சுதந்திர ஊடகம் என்பது காணக் கிடைக்காத அரிய விஷயமாகிவிட்டது. அரசுக்கும், வலிமை வாய்ந்த ராணுவத்துக்கும் எதிரான செய்திகளை வெளியிடத் துணியும் ஊடகவியலாளர்கள், கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் கொல்லப்படுவதும் வழக்கமாகி விட்டதால், உலகிலேயே, ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தாக விளங்கும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானும் உள்ளது. ஊடகங்கள் மீதான இத்தகைய அடக்குமுறைகள் தவிர, சமூக வலைதளங்களும் பத்திரிக்கையாளர்களை மிரட்டும் சாதனங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. அரசுக்கு எதிராகக் குரலெழுப்புவோர், திட்டமிட்டு நசுக்கப்படுகின்றனர். பாகிஸ்தானில் சுதந்திரமான செய்தி சேனல்கள் பல செயல்பட்டு வந்தாலும், பொதுவான கருத்துக்களை ஒரு திசையில் இட்டுச் செல்வது என்பது இயலாத காரியமாக விளங்குகிறது. எனவே, ஊடக செய்திகளை நம்பாமல், பொதுமக்கள் தன்னிச்சையாக, சுதந்திரமாக பிம்பங்களை உருவாக்கிக் கொள்ள முற்பட்டுள்ளனர்.

ஒரு பொருளில் இருந்து மற்றொன்றிற்குத் தாவிச் செல்கிற மனப்பான்மையுடனும், தொழில்நுட்பம் மற்றும் அமைப்பு ரீதியிலும் பாகிஸ்தான் பத்திரிக்கை உலகம் கடந்த பதிற்றுக்களைத் தாண்டியுள்ளது. செயற்கைக் கோள் மற்றும் ஒளிபரப்புத் தொழில்நுட்பம் பெருகி, அவை ஒழுங்குமுறைப் படுத்தப்பட்டுள்ளன. 24 மணிநேர, புதுச் செய்திகள் வெளிவரத் துவங்கியுள்ளன, இருப்பினும், இவையெல்லாம் பத்திரிக்கை சுதந்திரம் ஆகாது. சொல்லத்தக்க, சொல்லத்தகாத செய்திகள் என்ற பாகுபாட்டிற்கு அரசியல் செய்திகள் உட்படுத்தப்படும் வரை, பாகிஸ்தானில் பத்திரிக்கை சுதந்திரம் என்பது எட்டாக் கனியாகவே விளங்கும்.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.