வலுத்துவரும் ஈரான் – அமெரிக்க சச்சரவு – ராஜ தந்திரத் தீர்வு அவசியம்.

(ஈரான் விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் அசிஃப் ஷூஜா அவகளின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.)

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்பிரச்சனையின் மீது, சர்வதேச சமுதாயம் கவனம் செலுத்துவது அவசியமாகிறது. ஈரான் - அமெரிக்கா மோதல், 1979 ஆம் வருடம் ஈரான் புரட்சி ஏற்பட்ட காலத்தில் துவங்கியது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள், கடந்த ஆண்டு, அதுவரை அமலில் இருந்த, ஜேசிபிஓஏ எனப்படும் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து, தன்னிச்சையாக விலகிக் கொண்டது முதல், இந்த மோதல் அதிகரித்துள்ளது. அப்போதிலிருந்து, ஈரான் மீது முன்பு விலக்கிக் கொண்டிருந்த தடைகளை அமெரிக்கா, மீண்டும் புகுத்தியுள்ளது. அதைத் தவிர புதிய தடைகளையும் ஈரான் மீது விதித்துள்ளது. அவற்றில் சில, ஈரான் புரட்சி பாதுகாப்புப் படையையும், ஈரான் தலைவரையும் இலக்காகக் கொண்டுள்ளன.

தனது அதிபர் தேர்தலுக்கான பிரச்சார காலத்திலேயே, ட்ரம்ப் அவர்களுக்கு ஈரானுடனான அணு ஒப்பந்தத்தின்மீது வெறுப்பு இருந்தது. தேர்தலுக்குப் பிறகு அதிபர் டிரம்ப் அவர்கள் ஈரானுக்கு எதிரான கொள்கைகளைத் தீவிரப்படுத்தி, அதன்மூலம், பிராந்தியத்தில் ஈரானின் செல்வாக்கு விரிவடையாமல் முடக்க முற்பட்டுள்ளார். ஈரான் மீது அதிகப்படியான அழுத்தத்தை ஏற்படுத்துவதன் மூலம், ஈரான், அமெரிக்காவுடன் புது அணுஆயுத ஒப்பந்தத்தை மேற்கொள்ள நிர்ப்பந்திப்பதே அவரது நோக்கமாகும். அரசியல் மற்றும் பொருளாதாரத் தடைகள் மட்டுமல்லாமல், வளைகுடா பகுதிகளில், விமானம் தாங்கி, B52 குண்டுகள் மற்றும் அதிகப்படியாக ஆயிரம் அமெரிக்க துருப்புக்கள் உள்பட, கணிசமான இராணுவப் படைகளை அமெரிக்கா நிலைநிறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, ஈரானும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் அதிகரித்துள்ளது. ஜேசிபிஓஏ ஒப்பந்தத்தில் உள்ள தனது சில கடமைகளை ஈரான் குறைத்துக் கொண்டுள்ளது. யுரேனிய கையிருப்பை ஏற்றுமதி செய்வதை ஈரான் நிறுத்திவிட்டது. தவிர, யுரேனியம் செறிவூட்டும் அளவையும் அதிகரித்துள்ளது. அணுஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதால் தங்கள் நாட்டிற்கு அளிக்கப்பட்ட பொருளாதார சலுகைகள், அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி விட்டதால் தடைப்பட்டதையடுத்து, தாங்கள் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தூண்டப்பட்டதாக ஈரான் வாதாடுகிறது. இவ்வாறான செயல்கள் மூலம் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் வெளியேறும் சூழல் நிலவியதால், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பிற ஐரோப்பிய நாடுகள், ஈரான் இந்த அணு ஆயுத ஒப்பந்தத்திற்கு உடனடியாகக் கட்டுப்பட்டு, அந்த ஒப்பந்தத்தைக் காப்பாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளன.

வளைகுடா பகுதிகளில் கடந்த சில வாரங்களில் நடைபெற்ற சில நிகழ்வுகள், ஈரான் அமெரிக்கா சச்சரவை மேலும் அதிகப்படுத்தியுள்ளன. ஓமன் வளைகுடா பகுதியில் எண்ணெய் ஏந்திய கப்பல் மீது பல தாக்குதல்கள், ஆளில்லா அமெரிக்க ட்ரோன் விமானத்தை வளைகுடா பகுதியில் ஈரான் சுட்டு வீழ்த்தியது, ஜிப்ரால்டர் பகுதியில் ஈரான் நாட்டின் எண்ணெய்க் கப்பலை பிரிட்டிஷ் படைகள் பறிமுதல் செய்தது, அதைத் தொடர்ந்து பதிலடி கொடுக்க, ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை போன்றவை அவற்றுள் அடங்கும். இந்த நிகழ்வுகளும், பொருளாதார அழுத்தங்களுக்குப் பதிலடியாக, ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் உந்தப்படும் என்ற அச்சுறுத்தலும், அந்தப் பகுதி வழியாக செல்லும் கப்பல்களின் , பாதுகாப்பிற்கு சவால் விடுத்துள்ளன. உலகின் கடல்சார் எண்ணெய்ப் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெற்று வரும் நிலையில், அது மூடப்பட்டால், வளைகுடாப் பகுதியில் போர் மூளும் அபாயம் உள்ளது. ஆகையால், உலக சக்திகள் ஒன்று சேர்ந்து இந்தப் பதட்டத்தை ராஜதந்திர முறையில் உடனடியாகத் தீர்ப்பதற்கு இதுவே சரியான தருணமாகும்.

இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயில் பெரும்பங்கு வளைகுடா நாடுகளிலிருந்து வருகிறது. ஆகையால் இந்தப் பிராந்தியம் இந்தியாவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ஏதாவது தடங்கல் ஏற்பட்டால், அது இந்தியாவின் ஹைட்ரோகார்பன் இறக்குமதியையும், எரியாற்றல் பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும். இந்தப் பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் பதட்டத்தைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடா பகுதி வழியாகச் செல்லும் எண்ணெய் ஏந்திய இந்தியக் கப்பல்களின் பாதுகாப்பிற்காக, இந்திய கப்பற்படை, ஓமன் வளைகுடா பகுதியில், ஐஎன்எஸ் சென்னை மற்றும் சுனைனா ராணுவக் கப்பல்களை நிலை நிறுத்தியுள்ளது. இந்த பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுடனும் இந்தியா சிறந்த இருதரப்பு உறவுகளை நிலைநாட்டி வருகின்றது. ஆகையால் ஏதாவது இராணுவ மோதல் இந்த பிராந்தியத்தில் ஏற்பட்டால் அது இந்தியாவின் சொந்த நலனுக்கு எதிர்வினையாக அமையும். இந்தப் பிரச்சனை, இந்த பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை சீர்குலைத்து, போர் சூழலை உருவாக்கி, பொருளாதார மற்றும் மனித சேதங்களை ஏற்படுவதற்கு முன்னால், முரண்பட்ட நாடுகள், இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அமைதியான முறையில், நேர்மையான மற்றும் தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ளும் என்று நம்பப்படுகிறது.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.