பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை மட்டுப்படுத்த வேண்டிய தருணம்.

(இந்தியன் சயின்ஸ் ஜர்னல் பத்திரிக்கையின் தலைமை ஆசிரியர் என்.பத்ரன் நாயர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)
இந்தியா உள்பட, உலகின் பல இடங்கள் கடுமையான வெப்ப அலையில் சிக்கியுள்ளன என்று அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தானிலுள்ள சுரு என்னுமிடத்தில் வெப்பம் 50 டிகிரி செல்ஷியஸ் எல்லையைத் தாண்டியுள்ளது. வெப்ப அலையிலிருந்து தற்காலிகமாக சிறிது ஓய்வு கிடைத்தாலும், பல இடங்களில் கடுமையான வெப்பம் தொடர்ந்து நீடிக்கிறது. வெப்ப அலை வீச்சில் இந்தியாவின் சில பகுதிகள் சிக்குவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், அதன் தீவிரத்திலும் கால அளவிலும், பருவநிலை மாற்றங்களால் அண்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் தேசிய பருவநிலை சீரமைப்பு மையம் அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், மனிதனால் தூண்டப்பட்ட பருவநிலை மாற்றங்கள் காரணமாக, 10 லட்சம் வகையான உயிரினங்கள் பூண்டோடு அழியும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தும் வகையில் இந்த அறிக்கை இருந்தாலும், அந்த பேராபத்து உண்மையிலேயே நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.
பருவநிலை மாற்றம் என்பது, சில வாயுக்கள் பூமியிலிருந்து வெப்பம் வெளியேறுவதைத் தடுப்பதால், வானிலை வடிவங்களில் உண்டாகும் மாற்றம் ஆகும். இவ்வாறு பூமியிலிருந்து வெப்பம் வெளியேறுவதைத் தடுக்கும் வாயுக்கள் பசுமைக்குடில் வாயுக்கள் என அழைக்கப்படுகின்றன. நீராவி, கார்பன் டை ஆக்ஸைட், மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைட், குளோரோஃப்ளூரோ கார்பன்ஸ் எனப்படும் வாயுக்கள் இதில் அடங்கும்.
அடுத்த நூறு ஆண்டுகளில், பூமியின் வெப்பநிலை, 2.5 முதல் 10 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும் என்று, ஐபிசிசி எனப்படும் பருவநிலைக்கான அரசுகளுக்கிடையிலான குழு கணித்துள்ளது. இக்குழுவில், பலநாடுகளைச் சேர்ந்த 1300க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இடம் பெற்றுள்ளனர். தனிப்பட்ட பிராந்தியங்களில், பருவநிலை மாற்றத்தால் உண்டாகும் தாக்கங்களின் தீவிரமும், கால அளவும் மாறுபடும். இது அப்பிராந்தியங்களில் எடுக்கப்படும் பருவநிலை மாற்றத்தை எதிர்த்த நடவடிக்கைகளைப் பொறுத்தும் மாறுபடும்.
1990 ஆம் ஆண்டு வெப்பநிலை ஒப்பீட்டில், பூமியின் சராசரி வெப்பநிலை 1 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் என்ற அளவில் அதிகரித்தால், சில பகுதிகளில் நன்மையும், சில பகுதிகளில் தீமையும் விளையும் என்று ஐபிசிசி குழு கணித்துள்ளது.
பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை இந்தியா ஏற்கனவே உணரத் துவங்கியுள்ளது. இந்தியாவின் பலபகுதிகளிலும், வழக்கத்துக்கு மாறான அதிகப்படியான வெப்பநிலை அடிக்கடி நிகழ்கிறது. பருவ மழையில் ஸ்திரமற்ற தன்மை அதிகரிப்பதால், கோதுமை மற்றும் பிற தானியங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, அதனால் உணவுப் பாதுகாப்பில் பங்கமும், உயிரிழப்புக்களும் விளையக்கூடும். குளிர்கால வெப்பநிலை அரை டிகிரி செல்ஷியஸ் என்ற அளவில் உயர்ந்தால், இந்தியாவில் கோதுமை உற்பத்தி ஹெக்டருக்கு 450 கிலோ என்ற அளவில் குறையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கோதுமை உற்பத்தி, சராசரியாக, ஹெக்டருக்கு 2,600 கிலோ என்ற அளவில் உள்ளது.
கடல்மட்டம் உயர்வதால், கடற்கரை அரிப்பு மற்றும் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும். கங்கை, பிரம்மபுத்ரா போன்ற மாபெரும் டெல்டா பகுதிகளும் பாதிப்படையக்கூடும். லட்சத்தீவுகள், மாலத்தீவுகள் போன்ற இடங்களும் கடல்மட்ட உயர்வால் பெரிதும் பாதிப்படையக்கூடும்.
உலகம் எதிர்கொள்ளும் மிகவும் சிக்கலான பிரச்சனையாக, பருவநிலை மாற்றம் உள்ளது. அறிவியல், பொருளாதாரம், சமுதாயம், அரசியல், தார்மீக நெறிமுறைகள் ஆகியவற்றைச் சார்ந்திருக்கும் உலகளாவிய பிரச்சனையான பருவநிலை மாற்றம், உள்ளூரில் நீண்டாகால அடிப்படையில் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை எந்த அளவுக்கு நாம் கட்டுப்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து, பருவநிலை மாற்றத்தை நாம் எந்த அளவுக்கு மட்டுப்படுத்த முடியும் என்பது நிர்ணயிக்கப்படும். பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை மட்டுப்படுத்துதல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கு ஒத்திசைவான பழக்க வழக்கங்களை மேற்கொள்ளுதல் என்ற இருமுனை செயலுத்தி கையாளப்பட வேண்டும்.
உலக வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றை முறியடிக்க எடுக்கப்படும் உலகளாவிய முன்னெடுப்புக்களுக்கு முழு ஆதரவு தருவதில் இந்தியா உறுதிப்பாட்டுடன் உள்ளது. பாரீஸில் 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற, இதற்கான ஐ.நா. உச்சிமாநாட்டில், உலக நாடுகள், பெருவாரியான பருவநிலை மாற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதி பூண்டன. இந்த உச்சிமாநாட்டில், பிரதமர் நரேந்திர மோதி அவர்களும், ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் அவர்களும் இணைந்து, சர்வதேச சூரியக் கூட்டமைப்பை உருவாக்கும் முன்னெடுப்பை மேற்கொண்டனர். பருவநிலை மாற்றத்துக்குக் காரணியாக விளங்கும் படிம எரிபொருளுக்கு மாற்றாக, பிரம்மாண்டமான சூரிய சக்தி அமைப்பை பல நாடுகளுடன் இணைந்து உருவாக்குவதே இக்கூட்டமைப்பின் நோக்கமாகும்.
பருவநிலை மாற்றம் என்பது உண்மையில் நிகழக்கூடியது. உலக நாடுகளும் மக்களும் உறுதியுடன் செயல்பட வேண்டிய தருணம் வந்து விட்டது. இதுவரை மேற்கொள்ளாத நடவடிக்கைகளைத் தயக்கமின்றி செயல்படுத்தி, பருவநிலை மாற்றத்திலிருந்து தப்பிப்பதோ அல்லது காலம் கடந்து விட்டது என்றும், நம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்றும் கருதி தோற்றுப் போவதோ மக்கள் மற்றும் நாடுகள் கையில் உள்ளது. குறுகியகால பொருளாதார நலன்களுக்காக, நீண்டகால அடிப்படையில் சுற்றுச் சூழலுக்கோ, மனிதகுல வாழ்வாதரத்துக்கோ உலை வைக்கும் வகையில் செயல்படக் கூடாது.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.