ஜல்ஷக்தி – நாட்டின் தண்ணீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள புதிய மத்திய அமைச்சகம்.

(மூத்த அறிவியல் விமரிசகர் பிமன் பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்).

மனித வாழ்க்கைக்குத் தண்ணீர் இன்றியமையாத ஒன்றாகும். இருப்பினும், உலகில் 84.4 கோடி பேருக்குத் தடையின்றி நீர் கிடைப்பதென்பது அரிதான விஷயமாக உள்ளது. உலக பொருளாதார மையத்தின் ஒரு அறிக்கையின் படி, சமூகத்தை பாதிக்கும் விஷயங்களில், நீர் நெருக்கடி என்பது, நான்காவது உலகளாவிய அபாயமாக உள்ளது.

இந்தியாவிலும் இந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த பல ஆண்டுகளில், நகராட்சி சார்ந்த குடிநீரின் அளவு மற்றும் தரம் என இரண்டிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை இந்தியா பெற்றுள்ளது. எனினும், அதிக அளவிலான ஜனத்தொகையால், திட்டமிடப்பட்ட நீர் ஆதாரங்கள் மீது இறுக்கம் அதிகமாகின்றது. கிராமப்புறங்களுக்கு இந்த செயல்முறைகளின் பயன்கள் பெரும்பாலும் கிடைக்காமல் போகின்றன. கூடுதலாக, இந்தியாவின் நகர்ப்புறங்களில் ஏற்பட்டிருக்கும் அதிகப்படியான வளர்ச்சி, அரசாங்கத் தீர்வுகளில் அழுத்தத்தை அதிகப்படுத்தியுள்ளது. எனவே, அரசாங்கத் தீர்வுகளில் உள்ள பற்றாக்குறையை ஈடுகட்ட, குடிநீர் வழங்கல் அபிரிமிதமாக தனியார் மயமாக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

குடிநீரில் முன்னேற்றம் ஒருபுறமிருக்க, மற்ற பல நீர் ஆதாரங்கள் உயிரியல் மற்றும் ரசாயனப் பொருட்களால் மாசுபடுகின்றன. நமது நாட்டில் ஏற்படும் நோய்களில் 21 சதவிகிதம் நீர் சார்ந்தவையாக இருக்கின்றன. மேலும், நாட்டில் 33 சதவிகித மக்களுக்குத் தான் முறையான சுகாதார வழிகளுக்கான வசதிகள் உள்ளன. எனினும், இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது

நீண்டகால அடிப்படியில் புதுப்பிக்கத்தக்க நீர்வளம் நாட்டில் குறைவாக உள்ளது என்பது கவலைக்குரிய விஷயமாகும். மிகப் பெரிய தானிய உற்பத்தியாளராக இருப்பதால், இந்தியாவின் நீர்த்தேவையும் அதிகமாக உள்ளது. அதிக அளவில் வேளாண் உற்பத்தி செய்யும் பிற நாடுகளைப் போல, இந்தியாவிலும் உணவு உற்பத்திக்காக, அதிக அளவில் நீர் ஊற்றுக்கள் உறிஞ்சப்படுகின்றன.

அரசாங்கத்தின் மூளையாக செயல்படும் நிதி ஆயோக், சுமார் 60 கோடி இந்தியர்கள், அதிக மற்றும் தீவிர அளவிலான தண்ணீர்ப் பிரச்சனையை’ எதிர்கொள்கிறார்கள் என்று கூறியுள்ளது.. 75 சதவிகித குடும்பங்களில், வீட்டில் குடிநீருக்கான வசதி இல்லை. அதே சமயம், தூய்மையான தண்ணீர் கிடைக்காமல், ஒவ்வொரு ஆண்டும், சுமார் 2 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். ஆண்டுதோறும், ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை, குறைந்தபட்சம், எட்டு மாநிலங்களிலாவது, கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகின்றது. பருவநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதல் ஆகியவை, மேலும் சூழலை மோசமாக்குகின்றன.

வளர்ந்து வரும் இந்த நெருக்கடியை சமாளிக்க, மத்திய அரசு, புதிதாக, ‘ஜல் சக்தி’ என்ற ஒருங்கிணைந்த அமைச்சகத்தை உருவாக்கியுள்ளது. தூய்மையான குடிநீரை வழங்குவது மற்றும் இந்தியாவின் நீர் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடி தீர்வு காண்பது ஆகியவை இதன் முக்கியப் பணிகளாக இருக்கும். நீர் வளங்கள், நதிகள் முன்னேற்றம் மற்றும் கங்கை நதி புதுப்பித்தல், குடிநீர் மற்றும் சுகாதாரம் ஆகிய அமைச்சகங்களை இணைத்து, இந்தப் புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. தூய்மையான குடிநீர் வழங்கல், சர்வதேச மற்றும் மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் சச்சரவுகளைத் தீர்த்து வைத்தல், கங்கை நதி மற்றும் அதன் கிளை நதிகள் மற்றும் துணைக் கிளை நதிகளை தூய்மையாக்கும் பணித்திட்டமான நமாமி கங்கே, ஆகியவை சார்ந்த விஷயங்களில் இந்த அமைச்சகம் கவனம் செலுத்தும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் இரண்டாவது பதவிக் காலத்தில், அனைவருக்கும் தூய்மையான குடிநீருக்கான வசதியை செய்து தருவதில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் தனது தேர்தல் பிரச்சாரத்தில் உறுதி அளித்திருந்தார். இதற்கென தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த ஜல்ஷக்தி அமைச்சகத்தின் உருவாக்கம், அந்த உறுதியை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகின்றது.

தற்போது, பல்வேறு அமைச்சகங்கள், தண்ணீர் குறித்த தங்கள் பங்குக்கான பணிகளைச் செய்துகொண்டிருக்கின்றன. உதாரணமாக, வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், நாட்டின் பல நதிகளின் பாதுகாப்பைப் பார்த்துக் கொள்கிறது. அதேபோல், கிராம்மப்புற நீர் வழங்கல், வீட்டு வசதி மற்றும் கிராமப்புற விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் பொறுப்பில் உள்ளது. நுண் நீர்பாசன பணித்திட்டங்கள், வேளான் அமைச்சகத்தின் கீழ் வருகின்றன.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜல் சக்தி அமைச்சகத்தின் பணிகள், முன்னர் இருந்த நீர் வளங்கள், குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகங்களை ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைப்பதையும் தாண்டி, இன்னும் விரிந்திருக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.. நாட்டிலுள்ள மொத்த நீர் தேவை மற்றும் வழங்கலுக்கான அளவுகளை ஒத்திசைக்க இந்த அமைச்சகம் முயற்சி செய்யும். இதனால் தண்ணீர் தொடர்பான பிரச்சனைகளுக்கு முழுமையான முறையில் தீர்வு காண முடியும். குறிப்பாக, வேளாண் அமைச்சகத்தின் கொள்கைகளை ஒருங்கிணைக்க புதிய அமைச்சகத்திற்கு அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும். நாட்டின் நீர்த் தேவைகளில் 80 சதவிகிதம் விவாசாயத்திற்கானது. மேலும், மாறுபட்ட பருவ நிலைகளைக் கொண்ட இடங்களுக்கான மாற்றுப் பயிர்களுக்கான தேர்வு பற்றிய ஆலோசனைகளையும் இந்த அமைச்சகம் வழங்கும். அதிக மழையில்லாத பகுதிகளுக்காக, இருக்கும் நீர் வளங்களை முறையாக உபயோகிக்கும் வகையில், தெளிப்பான் முறை பாசனம், சொட்டு நீர் பாசனம் போன்ற புதிய நீர்ப்பாசன தொழில்நுட்பங்களுக்கான ஆலோசனைகளும் அளிக்கப்படும்.

Comments