பாரபட்சமான ஜிஎஸ்பி விலக்கு.

(அமெரிக்க விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஸ்துதி பேனர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி).

இம்மாதம் 5 ஆம் தேதி முதல், இந்தியாவுக்கு அளிக்கப்பட்டுவந்த ஜிஎஸ்பி எனப்படும் பொது முன்னுரிமை முறையை அமெரிக்கா விலக்கிக் கொண்டுள்ளது. பாரபட்சமின்றியும், பிரதிபலனை எதிர்பாராமலும், வளர்ந்த நாடுகள், வளர்ந்துவரும் பொருளாதாரங்களுக்கு அளிக்கும் சலுகையாக ஜிஎஸ்பி இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின்கீழ், வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள்மீது வரிவிதிப்பு இருக்காது. இதனால், இருதரப்பு வர்த்தக உறவுகள் மேம்படும். இத்திட்டத்தின்கீழ், இந்தியாவிலிருந்து கிட்டத்தட்ட 3000 பொருட்களை வரிவிதிப்பின்றி அமெரிக்கா இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தது. ஜிஎஸ்பி திட்டத்தின்கீழ், 2018 ஆம் ஆண்டில், இந்தியா, 620 கோடி டாலர் அளவிற்கு மட்டுமே அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தது. அமெரிக்காவுக்கான மொத்த இந்திய ஏற்றுமதியில், ஜிஎஸ்பி திட்டத்தின்கீழான ஏற்றுமதியின் பங்கு கணிசமான அளவு குறைந்துள்ளது.

அமெரிக்க கால்நடை மற்றும் மருத்துவத்துறையினரின் வேண்டுகோளுக்கிணங்க, 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஜிஎஸ்பி சலுகை குறித்த மறுஆய்வை அமெரிக்கா மேற்கொண்டது. விலையுயர்ந்த மருத்துவப் பொருட்களான, இதய சிகிச்சைக்கான ஸ்டெண்ட் போன்ற பொருட்களின் விலையை இந்தியா கட்டுப்படுத்தியது. இதுகுறித்து அமெரிக்க நிறுவனங்கள் கவலை எழுப்பின. பின்னர், வேளாண் பொருட்களுக்கான சந்தை அணுகல், கால்நடைப் பொருட்கள், தகவல் தொழில்நுட்பப் பொருட்கள் மீதான நடைமுறைகளில் தளர்வு ஆகியவை உள்ளிட்ட பல விஷயங்களை தன்னிச்சையாக அமெரிக்கா முன்னிறுத்தியது. இவ்வாறாக, பல வர்த்தக விஷயங்கள் குறித்த, விரிந்த மறுஆய்வாக இது அமைந்தது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வந்த ஜிஎஸ்பி சலுகை, இம்மாதம் 5 ஆம் தேதியிலிருந்து விலக்கப்பட்டது சரியானதே என்று குறிப்பிட்டுள்ளார். கிரிஸ்டலைன் சிலிகான் ஃபோட்டோவோல்டாயிக் செல் சார்ந்த பொருட்கள், பெரிய வீட்டு உபயோக துவைப்பான்கள் போன்ற பொருட்கள் மீதான பாதுகாப்புக் கோட்பாடு விலக்கு சலுகையை அனுபவிக்கும் உலக வர்த்தக அமைப்பு நாடுகள் பட்டியலிலிருந்து இந்தியாவை நீக்கவும் தான் விரும்புவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அதிபர் டிரம்ப் அவர்களின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்திய அதிகாரிகள், அமெரிக்க அதிகாரிகளுடன், வேளாண் மற்றும் கால்நடைப் பொருட்கள், மருத்துவ சாதனங்கள் ஆகியவற்றில் வர்த்தக உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேரத்துக்கு இடமளிக்காத இந்தியாவின் சுகாதார விஷயங்களில் சமநிலையை நிலைநாட்டுவது இந்தியாவுக்கு அவசியமாகிறது.

சமமான, நியாயமான முறையில் இந்திய சந்தையை அமெரிக்கப் பொருட்கள் அணுகுவதை இந்தியா உறுதி செய்யத் தவறிவிட்டதாகக் கூறிய அதிபர் டிரம்ப், இந்தியாவுக்கான ஜிஎஸ்பி சலுகையை அமெரிக்கா விலக்கிக் கொள்ளும் என்று அறிவித்துள்ளார். தவிர, வளர்ந்து வரும் நாடு என்ற நிலையை இந்தியா தாண்டியுள்ளதாகவும், எனவே, அதற்கான சலுகைகள் பெறும் நாடுகள் பட்டியலிலிருந்து இந்தியா நீக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கடந்த மாதம் இந்தியாவுக்குப் பயணித்த அமெரிக்க வர்த்தக அமைச்சர் வில்பர் ராஸ் அவர்கள், இந்தியாவின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் என சிலவற்றைப் பட்டியலிட்டார். அவற்றில், தரவுகளை உள்ளூர் மயமாக்கல், மருத்துவ சாதனங்கள் மீதான விலை கட்டுப்பாடு, தகவல் தொடர்பு சாதனங்கள் மீது அதிக வரிவிதிப்பு ஆகியவற்றை உள்ளடக்கினார். இது அமெரிக்காவுக்கு கவலையளிக்கும் விஷயங்கள் என அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் இந்த முடிவு, வர்த்தக தற்காப்பு அணுகுமுறையைப் பிரதிபலிப்பதாக உள்ளது என, பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே நடைமுறையிலுள்ள பழக்கங்களிலிருந்து மாறுபட்ட சர்வதேச வர்த்தக முறையை டிரம்ப் நிர்வாகம் முன்னெடுத்துள்ளது. இது தேவையற்ற வர்த்தக சர்ச்சைகளை உருவாக்கக் கூடியது. இதற்கு அமெரிக்கா-சீனா இடையிலான வரிப்போரே சான்று. வளர்ந்து வரும் நாடுகள் மீது பாகுபாடு காண்பிப்பதால், அமெரிக்காவின் இந்த முடிவு, பாரபட்சமற்ற நடைமுறை என்ற அடிப்படைக் கொள்கையை மீறுவதாக உள்ளது. தங்கள் பொருளாதார மேம்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், வளர்ந்து வரும் நாடுகள், உலகப் பொருளாதார வளர்ச்சியில் பங்கு கொள்வதை உறுதி செய்வதே உலக வர்த்தக அமைப்பின் இலக்காகும்.

உலக வர்த்தக அமைப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த இலக்கையும் அமெரிக்காவின் முடிவு புறந்தள்ளுவதாக உள்ளது.

விளைவுகளைப் பற்றிய சிந்தனையற்ற அவசர முடிவு என, அமெரிக்காவின் இந்த முடிவை இந்திய தொழிலகக் கூட்டமைப்பு விமரிசித்துள்ளது. இது இந்திய ஏற்றுமதியாளர்களைப் பாதிக்கும் என்று அவ்வமைப்பு கூறியுள்ளது. இது குறித்து, அமெரிக்காவும், இந்தியாவும் தீவிரமாக ஆய்வு செய்து சுமுகமான முடிவை எட்டும் என நம்புவதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு அளிக்கப்பட்டுவந்த ஜிஎஸ்பி எனப்படும் பொது முன்னுரிமை முறையை அமெரிக்கா விலக்கிக் கொண்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது என்று இந்தியா தெரிவித்துள்ளது. இதனால் இருதரப்பிலும் வர்த்தகம் பாதிப்புக்குள்ளாகும் என்று இந்தியா கருதுகிறது. செயற்கை ஆபரணங்கள், காலணிகள் நீங்கலாக தோல் பொருட்கள், ரசயானப் பொருட்கள், பிளாஸ்டிக், வேளாண் பொருட்கள், மருந்துகள், அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் ஆகியவை அதிக பாதிப்படையக் கூடும் என்பதால் அவற்றுக்கான துறைகளை ஆதரிக்கும் வழிமுறைகளை இந்தியா ஆராய்ந்து வருகிறது.

தங்கள் தொழிலின் மீதான ஆபத்துக்களைக் குறைக்கும் வகையில், ஏற்றுமதியாளர்கள் புதிய அயல்நாட்டுச் சந்தைகளை அணுகுவதை ஊக்கப்படுத்த வேண்டும். அமெரிக்காவின் முடிவுக்குப் பதிலடியாக, அமெரிக்கப் பொருட்கள் மீது வரி விதிப்புக்கள் நிகழலாம் என்றாலும், அமெரிக்காவுடனான இருதரப்பு உறவுகளைப் பாதிக்கும் முதிர்ச்சியற்ற நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபடாது. அமெரிக்காவுடன் சுமுகமான முறையில் இப்பிரச்சனைக்குத் தீர்வுகாணும் முயற்சிகளில் இந்தியா தொடர்ந்து ஈடுபடும்.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.