விவசாயிகளுக்கு புதிய அரசின் உதவிக்கரம்.

(பேராசிரியர் டாக்டர் லேகா சக்கரவர்த்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் –பி.குருமூர்த்தி)

நரேந்திர மோதி அவர்கள் இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்ற பின் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், வேளாண் துறைக்கும், விவசாயிகள் நலனுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது மிகச் சரியானதே. ”பிரதான் மந்திரி கிசான் சம்மான் யோஜனா” என்ற திட்டத்தின்கீழ் முன்னர் அறிவிக்கப்பட்ட, ரூ.6,000/- வருடாந்திர உதவித்தொகையை, தகுதி வாய்ந்த அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில் விரிவாக்கம் செய்ய, அமைச்சரவைக் கூட்டம் முடிவெடுத்தது. இதன் மூலம், 14.5 கோடி விவசாயிகள் பயனடைவர்.

தவிர, ஒரு கோடி விவசாயிகளுக்கு வருமான ஆதரவாக, ரூ.2,000/- வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. சிறு மற்றும் ஏழை விவசாயிகளுக்கு வருமானத்தை உறுதி செய்யும் வகையில், ”பிரதான் மந்திரி சம்மான் நிதி யோஜனா” என்ற திட்டத்தை அரசு அறிமுகம் செய்கிறது என்று, மத்திய வேளாண்துறை அறிவித்துள்ளது. முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, கோரக்பூரில் ரூ.75,000 கோடி செலவில் துவக்கப்பட்ட திட்டத்தின் நீட்டிப்பாகும் இது.

நிதி உள்ளடக்கல் திட்டமான பி எம் கிசான் எனப்படும் இத்திட்டத்தின்கீழ், விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரொக்கம் நேரடியாக செலுத்தப்படும். 2019-20 ஆம் ஆண்டுக்கான வாக்கெடுப்பு நிதிநிலை அறிக்கையில், இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி, 2 ஹெக்டருக்கும் குறைவான விவசாய நிலம் கொண்ட சிறு மற்றும் ஏழை விவசாயிகளுக்கு, மூன்று தவணைகளில் ஆண்டொன்றுக்கு ரூ.6,000/- உதவித் தொகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், 12 கோடி விவசாயிகள் பலனடைவர். நெருக்கடி சூழலில் உழலும் வேளாண் துறைக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டது.

வங்கி நடைமுறைகளில் ஈடுபட்டுள்ள சிறு மற்றும் ஏழை விவசாயிகளின் எண்ணிக்கை இன்னும் குறைந்த அளவிலேயே இருந்து வரும் நிலையில், அவர்களுக்கு விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற திட்டங்களால் அதிகப் பயன் கிடைப்பதில்லை. தவிர, விவசாயக் கடன் தள்ளுபடி, மாநில அரசுகளின் பொதுத்துறை நிதிநிலைமையை வெகுவாகப் பாதிக்கும்.

இந்நிலையில், தானியங்கள், தோட்டப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி மற்றும் கரும்பு உற்பத்திக்குத் தகுந்த விலை கிடைக்காததால் உண்டாகும் நெருக்கடியை சமாளிக்க, பி.எம் கிசான் திட்டம் பெரிதும் உதவும்.

’வேலை வாய்ப்பு உறுதி’ என்பதிலிருந்து, ‘வருமான உறுதி’ என்ற கொள்கை மாற்றம் அண்மையில் நிகழ்ந்துள்ளது. சிறு மற்றும் ஏழை விவசாயிகள் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய சமுதாயத்தினருக்கு வருமான உறுதி என்பது, கண்ணியத்தையும், அதிகாரத்தையும் அளிக்கும் வரப்பிரசாதமாக அமையும். எனினும், வேளாண் துறையில், நீண்டகால அடிப்படையில், கட்டமைப்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு இது தீர்வாகாது.

வேளாண் துறை வளர்ச்சியை ஊக்குவிக்க, அத்துறையில் மூலதன உருவாக்கம் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக வேண்டுமென்றால். வேளாண் துறை 14 முதல் 15 சதவீத வளர்ச்சி பெற வேண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் அதிகளவில் வானம் பார்த்த பூமியாக இன்னும் விளங்குவதால், நீர்ப்பாசன கட்டமைப்பில் மறுசீரமைப்பு அவசியமாகிறது.

மத்திய அமைச்சரவையின் உறுதி மொழிக்கும், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கும் வேறுபாடு உள்ளதா என்பதை அரசு ஆழ்ந்து ஆராயும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாதிரியான, திட்ட அறிவிப்பு மற்றும் உண்மையில் நிதி ஒதுக்கீடு மற்றும் செலவுகள் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடுகளை ஆராய்வதற்கென்றே நிதி கவுன்ஸில் என்ற அமைப்பை சில நாடுகள் உருவாக்கியுள்ளன. இத்தகைய ஆய்வுகள், பி எம் கிசான் போன்ற திட்டங்கள் எந்த அளவுக்கு செம்மையாக செயல்படுத்தப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ள உதவுகின்றன.

பி எம் கிசான் திட்டத்துக்கான நிதி ஆதாரங்கள் குறித்து பொருளாதார நிபுணர்கள் கவனிக்கின்றனர். நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அளிக்கவிருக்கும் நிதிநிலை அறிக்கையில், இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டு குறித்த தெளிவு கிடைக்கும். வரவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் விவசாயத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பி எம் கிசான் சம்மான் யோஜனா திட்டம், முற்றிலும் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டமாகும். வருங்காலத்தில் இத்திட்டத்தில் மாநில அரசும் பங்கு பெறுமா என்பதையும், எந்த அளவிற்கு மாநில அரசு நிதித் தேவைக்குப் பங்களிக்கும் என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பொருளாதார வளர்ச்சி என்பதைத் தாண்டி, மனிதவளத்தைக் குறிக்கோளாகக் கொண்ட தைரியமான முன்னெடுப்பாக இத்திட்டம் பார்க்கப்படுகிறது. இதுபோன்ற திட்டங்களை மாநில அரசுகளும் முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி மட்டுமே மனித வளத்தை உறுதி செய்யாது என்பதால், பாதிக்கப்படக்கூடிய ஏழை விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொள்ளும் பி எம் கிசான் போன்ற திட்டங்கள் இன்றியமையாதவையாகும். திட்டங்களின் பலன்களை அடைவதில் எவரும் விடுபட்டு விடக் கூடாது என்ற பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் கொள்கை நடவடிக்கையாக பி எம் கிசான் கருதப்படுகிறது. “அனைவருடனும், அனைவரின் வளத்திற்கும், அனைவரின் நம்பிக்கைக்கு உரித்தானதும்” என்ற கோஷத்தினைப் பிரதிபலித்து, பாதிக்கப்படக்கூடிய சமுதாயத்தினரின் கண்ணியத்திற்கும், அதிகாரமளித்தலுக்கும் இத்தகைய திட்டங்கள் உதவும் என்றால் அது மிகையல்ல.






Comments