ஏறுமுகத்தில் இந்திய – கிர்கிஸ்தான் உறவுகள்

அகில இந்திய வானொலியின் செய்தி ஆய்வாளர் பதம் சிங் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி ராமமூர்த்தி

கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஷரிபோவிச் கடந்த 30 ஆம் தேதி அன்று நடைபெற்ற பிரதமர் மோதியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். பர்மா, பங்களாதேஷ், இலங்கை, தாய்லாந்து, பூடான், மாலத்தீவு ஆகிய நாடுகளின் தலைவர்களும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு சிறபித்தனர். ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள கிர்கிஸ்தான் அதிபர், மத்திய ஆசிய நாடுகளின் முக்கியத் தலைவர் ஆவார். பிரதமர் மோதியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட அவர், வருகின்ற 13-15 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள ஷாங்காய் மகாநாட்டிற்குப் பிரதமர் மோதிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவும் கிர்கிஸ்தானும் வலுவான இருதரப்பு உறவுகளைக் கொண்டுள்ளதாகவும் இந்த உறவுகள் வருகிற ஆண்டுகளில் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் பிரதமர் மோதி புகழாரம் சூட்டினார். பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட கிர்கிஸ்தான் அதிபருக்கு மோதி நன்றி தெரிவித்துக் கொண்ட்தோடு விரைவில் கிர்கிச்தான் பயணம் மேற்கொள்ளப் போவதாகவும் கூறினார்.
கிர்கிஸ்தான் நாடு, பண்டைய கிழக்குலகையும் மேற்குலகையும் இணைக்கும் வர்த்தகப் பட்டுச் சாலையின் பகுதியாக இருந்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1985 ஆம் ஆண்டு அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். 1991 ஆம் ஆண்டு கிரிகிஸ்தான் தனி நாடாக அறிவிக்கப்பட்ட பின்னர், 1992-ல் இந்தியா தூதரக உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டது.

இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் நிரந்தர உறுப்பினர் பதவியைப் பெற வேண்டும் என கிர்கிஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிலும் இந்தியா உறுப்பினர் ஆக வேண்டுமென கிர்கிஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளது. தீவிரவாதத்தை வேரறுக்கவும் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கவும் இரண்டு நாடுகளும் முயன்று வருகின்றன.

பண்பாடு, வர்த்தகம், விமானப் பயணம், முதலீடு, வரி விதிப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளன. 2012 ஆம் ஆண்டில், இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, தொலைதொடர்பு, மருத்துவம், கல்வி ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. 2013 ஆம் ஆண்டில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்டார். ஈரான் அதிபர் ஹசன் ரௌஹானி, மங்கோலிய அதிபர் எல்பெக்டோர்க் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர் ஜெனரல் மாஸெண்ட்சேவ் ஆகியோருடன் இந்திய அமைச்சர்கள் சந்தித்துப் பேசியது நினைவு கூரத் தக்கது.

பிரதமர் மோதி 2015 ஆம் ஆண்டில் கிர்கிஸ்தான் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போதைய அதிபர் அல்மாஸ்பெக் அதம்பயேவ், சபாநாயகர் அஸைல்பெக் ஜீன்பெகோவ் மற்றும் பிரதமர் தெமிர் சரியேவ் ஆகியோரைச் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார்.

மகாத்மா காந்தியின் சிலை திறப்பு, தொலைதொடர்பு மருத்துவத்தைத் துவக்கி வைத்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோதி, உயர் அதிகாரிகளுடனும் இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார். இராணுவப் பாதுகாப்பு, பண்பாடு, தேர்தல் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தாயின. 2016 ஆம் ஆண்டில் இந்தியப் பயணம் மேற்கொண்ட கிர்கிஸ்தான் அதிபர் பிரதமர் மோதியுடன் இணைந்து கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.

2016-17 ஆம் ஆண்டில் இந்தியா – கிர்கிஸ்தான் வர்த்தகம் 25 லட்சம் அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஜவுளிப் பொருட்கள், தோல் பொருட்கள், மருந்துப் பொருட்கள், தேயிலை ஆகியவை இந்தியாவிலிருந்து கிர்கிஸ்தான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கிர்கிஸ்தான் நாட்டின் மனித வள ஆர்றலை மேம்படுத்தும் பொருட்டு இந்திய அரசின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டங்களும் இந்திய அரசால் நிறைவேற்றப்படுகின்றன எனக் கூறினால் அது மிகையாகாது.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.