“ ஐந்தாவது சி ஐ சி ஏ உச்சிமாநாடு மற்றும் இந்தியா”
மத்திய ஆசியாவிற்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் அக்தர் ஜாபார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ. வெங்கடேசன்.
ஆசியாவில், தொடர்பு மற்றும் நம்பிக்கை மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான மாநாடு, அதாவது பொதுவாக அழைக்கப்படும் சி ஐ சி ஏ வின் ஐந்தாவது உச்சி மாநாடு சந்திப்பானது, போன வார இறுதியில் தஜிகிஸ்தான் நாட்டில் நடைபெற்றது. 1992 ஆம் ஆண்டு ஐ .நா பாதுகாப்பு சபையில் உரையாற்றும் பொழுது, கஜகஸ்தான் நாட்டின் முதல் அதிபரான Nursultan Nazarbayev அவர்கள் இந்த சி ஐ சி ஏ திட்டத்திற்கு முன்மொழிந்தார், அவரே இந்த சி ஐ சி ஏ திட்டத்திற்கு நிறுவனராகவும் கருதப்படுகிறார். சி ஐ சி ஏ வின் செயலகம் 2006 ஆம் ஆண்டு அஸ்தானாவில் அமைக்கப்பட்டது, அந்த நகரம் தற்பொழுது கஜகஸ்தான் நாட்டின் தலைநகரமான நுர்சுல்தான் ஆகும். சி ஐ சி ஏ வில், ஆசியாவில் இருந்து 30-க்கும் மேற்பட்ட உறுப்பினர் நாடுகள் உள்ளன மற்றும் பலதரப்பட்ட சர்வதேச அமைப்புகளும் இந்த மன்றத்தில் பார்வையாளராக உள்ளன. இதுவரை இந்த அமைப்பிற்கு கஜகஸ்தான், துருக்கி, சீனா , மற்றும் தஜிகிஸ்தான் போன்ற நாடுகள் தலைமை வகித்து வருகின்றது.
2002 ஆம் ஆண்டு Kazakhstan நாட்டின் Almaty நகரில் முதலாவது சி ஐ சி ஏ உச்சி மாநாடு நடைபெற்றது ,அப்பொழுது இதன் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது, அது அல்மேடி சட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் முதலாவது உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். 2006 ஆம் ஆண்டு அல்மேடி நகரில் நடைபெற்ற இரண்டாவது உச்சி மாநாட்டில் இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறை அமைச்சர் கலந்து கொண்டார். 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற மூன்றாவது உச்சி மாநாட்டில் இந்தியாவின் முன்னாள் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் , பிரதமரின் சிறப்பு தூதுவராக கலந்து கொண்டார். நான்காவது உச்சி மாநாடு 2014 ம் வருடம் மே மாதம் சீனாவின், ஷாங்காய் நகரில் நடைபெற்றது. இந்தியாவில் அப்பொழுது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த தருணத்தில் இந்த மாநாடு நடைபெற்றதால், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் அப்பொழுது கலந்து கொண்டனர்.
ஆசியாவின், இந்த சி ஐ சி ஏ மன்றத்தின் நோக்கமானது, இந்த கண்டம் முழுவதும் மற்றும் அதை தாண்டியும் அமைதி ,பாதுகாப்பு, மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவது மற்றும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது போன்றவையாகும். அதை நோக்கி முன்னேறுவதற்கு சி ஐ சி ஏ, நம்பிக்கை மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான ஒரு அட்டவணையை ஏற்றுக்கொண்டுள்ளது. நம்பிக்கை மேம்பாட்டு நடவடிக்கைகள் 5 விரிவான வகைகளில் பிரிக்கப்பட்டுள்ளது, புதிய சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்கள், பொருளாதாரம், சுற்றுப்புற சூழல், மனித மேம்பாடு மற்றும் இராணுவ -அரசியல் பரிமாணம். நம்பிக்கை மேம்பாட்டு நடவடிக்கைகள், போக்குவரத்து மற்றும் ஆற்றல் பாதுகாப்பு போன்ற துறைகளில் இந்தியா ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறது.
சி ஐ சி ஏ உச்சிமாநாடு ஆனது ஒவ்வொரு நான்கு வருட கால இடைவெளியில் நடைபெற்று வருகிறது. “சி ஐ சி ஏ பிராந்தியத்தில், பாதுகாப்பான மற்றும் மிகுந்த வளத்திற்கான பகிர்வு நோக்கு” என்பதே இந்த ஐந்தாவது உச்சிமாநாட்டின் தலைப்பாகும். இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சர் டாக்டர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்கள் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார். மத்திய ஆசிய பிராந்தியத்திற்கு புதிய அமைச்சர் மேற்கொள்ளும் முதல் பயணம் ஆகும் இது.
சி ஐ சி ஏ மேற்கொள்ளும் பலதரப்பட்ட நடவடிக்கைகளிலும், இந்தியா தொடர்ந்து தீவிரமாக பங்கு பெற்று வருகிறது. சி ஐ சி ஏ தொடர்ந்து படிப்படியாக முன்னேற வேண்டும் என்று புதுடெல்லி நம்புகின்றது. 21 ஆம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது, மற்றும் அமைதி பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் போன்றவற்றை ஊக்குவிப்பதில் சி ஐ சி ஏ முக்கிய பங்கு வகிக்கும் என்று, வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்கள் ஐந்தாவது உச்சி மாநாட்டின்போது உரையாற்றுகையில் குறிப்பிட்டார். பயங்கரவாதத்தை ஆழமான அச்சுறுத்தலாக ஆசியா தற்பொழுது எதிர்கொண்டுள்ளது, பயங்கரவாதிகளையும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களையும் சமமாகக் கருதக் கூடாது என்று அவர் கூறினார். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்கள் பற்றி பேசுகையில், ஆப்கான் தலைமையிலான தேசிய பாதுகாப்பு மற்றும் நல்லிணக்க செயல்முறைகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று டாக்டர் ஜெய்சங்கர் அவர்கள் கூறினார்.
ஆற்றல் பாதுகாப்பு பற்றாக்குறை ஒரு முக்கிய முன்னேற்ற சவால்களாக திகழ்கிறது என்று இந்திய அமைச்சர் மேலும் கூறினார். நுகர்வோர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இடையே ஏற்படும் பேச்சுவார்த்தை நிலையான ஆற்றல் சந்தையை ஏற்படுத்த வழிவகுக்கும். உலகிலேயே அதிக ஆற்றல் தயாரிப்பாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு ஆசியா ஒரு வீடாக அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் இந்தியாவும் பங்களிப்பு அளித்து வருகிறது, மற்றும் சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணி (ISA) வில், இதுவரை சேராத சி ஐ சி ஏ உறுப்பினர் நாடுகளை, இந்த முன்முயற்சியில் சேரும்படி அமைச்சர் அழைப்பு விடுத்தார். புது டெல்லி அருகே உள்ள குருகிராம் என்னுமிடத்தில் இந்த கூட்டணியின் தலைமையகம் அமைந்துள்ளது.
இந்த ஐந்தாவது சி ஐ சி ஏ உச்சி மாநாட்டு அறிவிப்பில், பயங்கரவாதம் உள்பட இந்தியா எழுப்பிய பிரச்சனைகள், சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை எதிர்கொள்ள விரிவான செயலுத்தியை ஏற்படுத்த உறுப்பினர் நாடுகளுக்கு இந்த அமைப்பு அழைப்புவிடுத்துள்ளது மற்றும் பயங்கரவாத செயல்களுக்காக, இணையதளத்தை தவறாக பயன்படுத்துவதை எதிர்கொள்வதற்கும், மற்றும் பயங்கரவாதிகளின் கூடாரங்களை அகற்றுவதற்கும் அழைப்பு விடுத்துள்ளது. சிறந்த பொருளாதார மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு, மற்றும் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து தொடர்புகளை மேம்படுத்தவும், இந்த உச்சிமாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. 2022 ஆம் வருடம் ஆறாவது சி ஐ சி ஏ உச்சி மாநாடு நடைபெறும்.
Comments
Post a Comment