பிரதமரின் கிர்கிஸ்தான் நாட்டுப் பயணம்.

(ரஷ்யா மற்றும் சிஐஎஸ் நாட்டு விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் இந்திராணி தலுக்தார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)
இரண்டாம் முறையாகப் பதவியேற்ற பின்னர், பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், இம்மாதம் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில், கிர்கிஸ்தான் தலைநகரான பிஷ்கேக்குப் பயணம் மேற்கொண்டார். அந்நாட்டு அதிபர் சூரோன்பே ஜீன்பெகோவ் அவர்களுடன் இருதரப்பு சந்திப்பு நிகழ்த்தினார்.
அவரது இந்த சந்திப்பு, சிறப்புமிக்க, செயலுத்தி ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்கியது. பிரதமர் திரு நரேந்திர மோதியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற உலகநாடுகளின் தலைவர்களுள், கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பெகோவ் அவர்களும் அடங்குவார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டின்போது, முதலாவது இந்தியா – கிர்கிஸ்தான் வர்த்தக மன்றத்தின் சந்திப்பில் கூட்டாக இருதலைவர்களும் உரையாற்றினர். அது மிகவும் முக்கியமானதகாவும், வெற்றிகரமானதாகவும் போற்றப்பட்டது.
இந்தியாவும், கிர்கிஸ்தானும் இருமுறை வரிவிதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தம் மற்றும் இருதரப்பு முதலீட்டுப் பிரகடனம் ஆகியவற்றுக்கு முழுவடிவம் கொடுக்கின்றன. இது, இருதரப்பு வர்த்தகத்துக்கு உகந்த சூழலை உருவாக்கித்தரும். இருதரப்பு முதலீட்டுப் பிரகடனம், அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்த செயல்திட்டத்தை உருவாக்க உதவும். 2016-17 ஆம் நிதியாண்டில், இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் 2.49 கோடி டாலர் என்ற அளவில் இருத்தது. கிர்கிஸ்தானுக்கான இந்திய ஏற்றுமதி 2.26 கோடி டாலர் என்ற அளவிலும், இந்தியாவுக்கான கிர்கிஸ்தானின் ஏற்றுமதி, 23.2 லட்சம் டாலர் என்ற அளவிலும் இருந்தது. இருநாடுகளும் இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளன.
ஈரானிலுள்ள சபஹார் துறைமுகத் திட்டம், இந்தியாவுக்கும் கிர்கிஸ்தானுக்குமிடையிலான வர்த்தகத்தை அதிகரிக்கப் பெரிதும் உதவும் என்று இருதலைவர்களும் நம்பிக்கை தெரிவித்தனர். சர்வதேச வர்த்தகத்தில் பெரும் மாற்றத்தை உண்டாக்கவல்ல சர்வதேச வடக்கு – தெற்கு வழித்தடத் திட்டத்தில் இருநாடுகளும் இணைந்து செயல்படுகின்றன.
இந்தியா – கிர்கிஸ்தான் கூட்டு மன்றத்தின் சந்திப்பில் உரையாற்றுகையில், கிர்கிஸ்தானிலுள்ள தொழில் முனைவோர், இந்தியா வழங்கும் அபிரிமிதமான வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு, பிரதமர் மோதி அவர்கள் அழைப்பு விடுத்தார். இருதரப்பு வர்த்தகத்தை ஊக்குவிக்கும் சாதகமான சூழல், இணைப்பு மற்றும் தொழில்களுக்கு இடையிலான பரிமாற்றங்கள் ஆகியவற்றை இந்தியா தன்னகத்தே கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
ஆர்கானிக் பொருட்கள், மலைத்தேன், வால்நட், பால் பொருட்கள், ஜவுளி, ரயில்வே, நீர்மின் நிலையம், சுரங்கம் மற்றும் கனிமவள ஆய்வுகள் ஆகிய துறைகளில், கிர்கிஸ்தானில் இந்தியா முதலீடு செய்யலாம் என்று பிரதமர் மோதி அவர்கள் குறிப்பிட்டார். கிர்கிஸ்தானுக்கு வளரும் சந்தையாக இந்தியா விளங்குவதால், கிர்கிஸ்தான் தொழிலதிபர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டுமென்று அவர் அழைப்பு விடுத்தார். இந்தியாவிடம் திறன் படைத்த தொழிலாளர்கள், தொழில் முனைவதில் எளிமை மற்றும் இருமுறை வரிவிதிப்புத் தவிர்ப்பு போன்றவை உள்ளன என்றும், வர்த்தகம் மற்றும் முதலீடுகள் தழைக்க ஏதுவான சிறந்த இணைப்புக்கள் உள்ளன என்றும் அவர் கூறினார். அடுத்த ஐந்தாண்டுகளில், இந்தியப் பொருளாதாரம் ஐந்து லட்சம் கோடி டாலர் அளவை எட்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். அந்த இலக்கை எட்டுவதற்கு, இளைஞர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் பொருளாதார நிலை மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்போது, அதன் தாக்கமாக, கிர்கிஸ்தானும் மேம்படும் என்று பிரதமர் மோதி அவர்கள் குறிப்பிட்டார். எனவே, கிர்கிஸ்தானுடனான இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டம், இந்தியாவின் ஐந்து லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தில் ஓர் அங்கம் வகிக்கும் என்றும், இதனால் இருநாடுகளுக்கும் பரஸ்பர நன்மைகளும் வளர்ச்சியும் ஏற்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
மத்திய ஆசிய நாடுகளுடன் நல்லெண்ணத்தைப் பகிரும் இந்தியா, இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் மூலம், தனது வளர்ச்சியில் அந்நாடுகள் பங்கேற்க வேண்டும் என்று விரும்புகிறது. இவ்வாண்டு பிஷ்கேக்கில் நடைபெறவுள்ள “நமஸ்கார் யூரேஷியா” வர்த்தகக் கண்காட்சி, மத்திய ஆசிய நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தைப் பறைசாற்றும் விதமாக விளங்கும். மத்திய ஆசிய நாடுகளுக்கும், இந்தியாவுக்குமிடையே, தொழில்களுக்கிடையிலான சந்திப்புக்கள் நிகழ்வதற்கு இந்தக் கண்காட்சி ஊக்கமளிக்கும்.
பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடுகள், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளும் 15 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இருநாடுகளுக்குமிடையிலான செயலுத்திக் கூட்டாளித்துவத்தை வலியுறுத்தும் கூட்டறிக்கையிலும் இருநாடுகளும் கையெழுத்திட்டன. கிர்கிஸ்தானின் வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவ, 20 கோடி டாலர் கடனுதவித் திட்டத்தை இந்தியா அறிவித்தது. 2021 ஆம் ஆண்டை, கலாச்சாரம் மற்றும் நட்பின் அடையாள ஆண்டாகக் கொண்டாடுவது என்று இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் கிர்கிஸ்தான் பயணம், மிகுந்த பயனளிப்பதாகவும், வெற்றிகரமானதாகவும் அமைந்தது. அனைத்து ஒப்பந்தங்களையும் நிறைவேற்ற இருநாடுகளும் முனைப்பு காட்டுவது அவசியம்.


Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.