அண்டைநாடுகளுக்கு முதலிடம் மற்றும் சாகர் கொள்கை – மீண்டும்வலியுறுத்தும் இந்தியா.

(இட்சா ஆய்வாளர் டாக்டர் குல்பின் சுல்தானா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)

கடந்த வார இறுதியில் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் மாலத்தீவுகள் மற்றும் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டார். இரண்டாவது முறையாக பிரதமாரகப் பதவியேற்றபின் அவர் மேற்கொண்ட முதல் அயல்நாட்டுப் பயணம் ஆகும் இது. இப்பயணம், அண்டைநாடுகளுக்கு முதலிடம் மற்றும் சாகர் எனப்படும் பிராந்திய வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான கொள்கைக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது.

2018 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம்,இப்ராஹிம் முகம்மது சோலி அவர்கள் மாலத்தீவுகளின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் வரை, அந்நாட்டில் நிலவிய அரசியல் இக்கட்டான சூழலின் காரணமாக, அண்டைநாடுகளுக்கு முதலிடம் என்ற கொள்கையை இந்தியா கடைபிடித்தபோதிலும், பிரதமர் மோதி அவர்களால் மாலத்தீவுகளுக்கு தனது முந்தைய ஆட்சியில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள இயலவில்லை. எனினும் அவர், அதிபர் சோலி அவர்களின் பதவியேற்பு விழாவில் பங்கு கொள்ள, 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாலத்தீவுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். தனது இரண்டாவது ஆட்சியில் முதல் அயல்நாட்டுப் பயணத்திற்கு மாலத்தீவுகளைத் தேர்ந்தெடுத்ததன் மூலம், பிரதமர் மோதி அவர்கள், இருநாடுகளுக்கும் இடையில் நிலவும் பாரம்பரிய நல்லுறவுக்கு வலு சேர்த்து, சோலி அவர்களின் ஆட்சிக்கு ஊக்கமளிப்பதை வெளிப்படுத்தினார்.

பிரதமர் மோதி அவர்களின் இந்த இரண்டுநாள் பயணத்தின்போது, மாலத்தீவுகளின் உயரிய விருதான இஸ்ஸுதீன் விருது அவருக்கு அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். இந்திய கடற்படை மற்றும் மாலத்தீவுகளின் தேசிய பாதுகாப்புப் படை ஆகியவற்றுக்கிடையிலான தகவல் பரிமாற்ற தொழில்நுட்ப ஒப்பந்தம், நீர் விவரம், சுகாதாரம், கடல்வழிப் பயணியர் மற்றும் சரக்குப் போக்குவரத்து, சுங்கத்துறையில் திறன் வளர்ப்பு, அரசு நிர்வாகத்தில் பயிற்சி மற்றும் திறன் வளர்ப்பு ஆகிய துறைகளில் ஒப்பந்தங்கள் ஆகியவை பரிமாறிக்கொள்ளப்பட்டன.

மாலத்தீவு நாடாளுமன்றமான மக்கள் மஜ்லிஸில் பிரதமர் மோதி அவர்கள் உரையாற்றினார். மாலத்தீவுகளின் 80 வருட நாடாளுமன்ற வரலாற்றில், அயல்நாட்டுத் தலைவர் ஒருவருக்கு மஜ்லிஸில் உரையாற்றும் கௌரவம், இதற்கு முன்னர் ஒரே ஒருமுறைதான் வழங்கப்பட்டுள்ளது. இந்த உரையில், நியாயமான, சமநிலை ஜனநாயகம் சார்ந்த உலகம் உருவாவது குறித்த தனது தொலைநோக்கு, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நீடித்த அமைதி மற்றும் வளர்ச்சிக்கான தனது அவா ஆகியவை குறித்து பிரதமர் குறிப்பிட்டுப் பேசினார்.

மாலத்தீவு நாடாளுமன்ற சபாநாயகர் திரு முகமது நஷீத், துணை அதிபர் திரு ஃபைசல் நசீம் ஆகியோரையும், மௌமூன் மறுசீரமைப்பு இயக்கத்தின் தலைவர் மௌமூன் அப்துல் கயூம், ஜுமோரீ கட்சித் தலைவர் காசிம் இப்ராஹிம், அதாலத் கட்சித் தலைவர் இம்ரான் அப்துல்லா ஆகிய அரசியல் தலைவர்களையும் மோதி அவர்கள் சந்தித்துப் பேசினார். ஆளும் கூட்டணி அரசு தொடர்ந்து செயல்படுதல் மற்றும் மாலத்தீவுகளில் ஜனநாயகத்தைத் தழைக்கச் செய்தல் ஆகியவை அவரது பேச்சுவார்த்தையில் இடம் பெற்றிருந்தன.

மாலத்தீவுகளுடன் இந்தியா சிறப்பு வாய்ந்த நல்லுறவைப் பேணி வருவதற்கு ஓர் அடையாளமாக பிரதமர் மோதி அவர்களின் இப்பயணம் அமைந்துள்ளது. வெற்றிகரமாக அமைந்த இப்பயணத்தின் முடிவில் வெளியிட்ட கூட்டறிக்கையில், இந்தியாவுக்கு முதலிடம் என்ற மாலத்தீவின் கொள்கையை அதிபர் சோலி வலியுறுத்தினார். இந்தியாவுடனான பலதரப்பட்ட, பரஸ்பர நலன் பயக்கும் கூட்டாளித்துவத்தை மேலும் ஆழப்படுத்துவதற்கு தமது அரசு முழு ஆதரவு அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். திருத்தியமைக்கப்பட்ட, விரிவான ஐ.நா.பாதுகாப்புச் சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்குத் தங்கள் ஆதரவையும், 2020-21 ஆம் ஆண்டுக்கான நிரந்தரமற்ற உறுப்பினர் அந்தஸ்திற்குத் தங்கள் ஆதரவையும் அதிபர் சோலி அவர்கள் தெரிவித்தார். இந்திய, மாலத்தீவு இருதரப்பு உறவுகளில் கணிசமான மேம்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாலத்தீவுகளிலிருந்து இந்தியா திரும்பும் வழியில், பிரதமர் மோதி அவர்கள், இலங்கையில், குறுகியகால அளவிலான பயண நிறுத்தம் மேற்கொண்டார். கொழும்புவில் அவர் இருந்த நான்கு மணி நேரத்தில், அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, அமைச்சரவை உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தா ராஜபக்ச மற்றும் தமிழ் தேசிய கூட்டணித் தலைவர்கள் ஆகியோரை சந்தித்தார். செயிண்ட் ஏண்டனி தேவாலயத்துக்கு விஜயம் செய்த பிரதமர் மோதி அவர்கள், ஈஸ்டர் பண்டிகையின்போது நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தினார்.

பயங்கரவாதிகளின் கொடூரத் தாக்குதலில் சிக்குண்ட இலங்கைக்கு ஆதரவளிக்கும் வகையில், அந்நாட்டுக்கு இந்தக் குறுகியகாலப் பயணத்தை பிரதமர் மோதி அவர்கள் மேற்கொண்டார். இலங்கையில் நிகழ்ந்த இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப்பின், அந்நாட்டிற்குப் பயாணித்த முதல் அயல்நாட்டுத் தலைவர் மோதி அவர்கள். அவருக்கு நன்றி தெரிவித்த இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மோதி அவர்களின் இலங்கைப் பயணத்தால், அந்நாட்டின் பொருளாதார, வர்த்தக, சுற்றுலாத் துறைகள் ஊக்கமடையும் என்று குறிப்பிட்டார். பயங்கரவாதத் தாக்குதலால், இலங்கையின் சுற்றுலாத்துறை எதிர்மறை விளைவுகளை சந்தித்த நிலையில், பிரதமர் மோதி அவர்களின் இலங்கைப் பயணம், இலங்கையின் பாதுகாப்பு நிலைமை மேம்பட்டுள்ளது என்பதை உலகுக்கு அறிவிக்கும் விதமாக அமைந்துள்ளது என நம்பப்படுகிறது. பயங்கரவாதத்துக்கும், தீவிரவாதத்துக்கும் எதிராக, இருநாடுகளுக்கும் இடையே கூட்டுறவை மேம்படுத்துவது என ஒப்புக்கொள்ளப்பட்டது.

அண்டைநாடுகளுடன் இணைந்து, பயங்கரவாதத்துக்கு எதிராக செயல்படவும், கடல்வழிப் பாதுகாப்பை உறுதி செய்யவும் பிரதமர் மோதி அவர்கள் காட்டும் முனைப்புக்கு எடுத்துக்காட்டாக அவரது இப்பயணங்கள் அமைந்துள்ளன.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.