5ஜி தொழில் நுட்பத்தை வரவேற்கும் இந்தியா

மூத்த பத்திரிக்கையாளர் கே.வி வெங்கடசுப்ரமனியன் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்

இந்தியா அடுத்த நூறு நாட்களுக்குள் 5 ஜி எனப்படும் ஐந்தாம் தலைமுறை அலைபேசி தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தைப் பரிசோதனை செய்துபார்க்கப்போகிறது. அடுத்த தலைமுறை அலைபேசி இணைய சேவையானது தற்போதிருக்கும் 4 ஜி இணையசேவையை விடவும்,  மிகவும் சீரானதாகவும்,  மிக வேகமாக இணைப்பு கிட்டுவதாகவும், தாமதாமவது மிக குறைவாகவும் இருக்கும் என்று உறுதி அளிக்கப்படுகிறது.
புது யுக 5 ஜி தொழில்  நுட்பமானது நாட்டில் பெரும்  தாக்கத்தை ஏற்படுத்தும், பரிணாம மற்றும் புரட்சிகரமான சேவைகளை அலைபேசிகளில் அறிமுகப்படுத்தும்.  தற்போது பயன்பாட்டில் இருக்கும் 2 ஜி, 3 ஜி மற்றும் 4 ஜி அலைபேசி இணைய சேவைக்கு 5 ஜி மேலும் வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மிக அதிக வேகமுடைய ஐந்து ஜி டிஜிட்டல் புரட்சியில் மிக முக்கிய பங்கு வகிக்ககூடும்.  இந்தியாவில் மிகப்பெரிய சமூக மாற்றத்தை கொண்டுவரக்கூடிய ஆற்றல் இந்த தொழில் நுட்பத்திற்குண்டு.
ஜூன் 3 ஆம் தேதி பொறுப்பேற்றுகொண்ட இந்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் திரு ரவி சங்கர் ப்ரசாத்,  5 ஜி தொழில் நுட்பமானது பின் தங்கிய பிரிவு மக்களுக்காகவும், கல்வி, சுகாதாரம், சமூக காரணங்கள் போன்றவற்றிற்காவும், கிராமப்புற மக்களுக்கு தொழில் நுட்பம் கிட்டுவதற்காகவும் உபயோகப்படுத்தப்படுவதற்கான எங்களது முயற்சியாகத் திகழும் என்று கூறியுள்ளார்.
குறைந்தது ஆறு மாதங்களோ அல்லது அதற்கும் மேலாகவோ சோதனை முயற்சிகள் செய்து பார்க்கப்படலாம்.  அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் 5 ஜி தொழில்  நுட்பங்கள் படிப்படியாகச் சேவை துறைகளில் பயன்படுத்தப்படக்கூடும் என்றும், 2024 ஆம் ஆண்டிற்குள் அனைத்துச் சேவைகளும் இந்தத் தொழில் நுட்பத்தினால் பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  வேர்ல்ட்வைட் வையர்லெஸ் வெப் WWWW எனப்படும் உலகளாவிய கம்பிகளற்ற இணையதளம் எனும் சொல் 5 ஜிக்காக எடுத்தாளப்பட உள்ளது.
முந்தைய தலைமுறை அலைபேசி இணைய தளச் சேவைகள் தனிப்பட்ட செல்லிடப்பேசி தளங்கள் மூலமாகவே கிட்டின.  முதல் தலைமுறை ஒன்று ஜி அலைபேசிகள் அல்லது செல்லிடப் பேசிகள் பேசுவதற்கு மட்டுமே உதவின.  அந்த காலகட்டத்தில் அவை புரட்சிகரமானவையாக இருந்தாலும் கூட  அலைக்கற்றை திறன் மற்றும் பாதுகாப்பைப் பொறுத்தவரையில் அவற்றின் திறன் மிக குறைவாகத்தான் இருந்தது.
இரண்டாம் தலைமுறை அதாவது இரண்டு ஜி, டிஜிட்டல் தொழில் நுட்பத்தை அடிப்படையாக கொண்டிருந்தது.  இரண்டு ஜி தொழில் நுட்பமானது கூடுதலான அலைக்கற்றை திறன், பாதுகாப்பு மற்றும் குறுஞ்செய்திகள், குறைந்த தரவு வீத தொடர்புகள் போன்ற புதிய அம்சங்களை தந்தது.  மூன்று ஜி என்றழைக்கப்பட்ட மூன்றாம் தலைமுறை தொழில் நுட்பத்தின்  நோக்கம் அதிவேக தரவு தருவதாகும்.  நான்காம் தலைமுறை நான்கு ஜி முழுக்க முழுக்க இணைய நெறிமுறை சார்ந்த தொழில் நுட்பம், ஒரு ஜி.பி.பி.எஸ் வரையில் தரவுகள் தரக்கூடியதாகும்.
ஐந்து ஜி சேவைகள் இவை அனைத்திற்கும் மேலானதாக விளங்கும். இயந்திரங்கள், தானியங்கி வாகனங்கள், ரோபோக்கள்,  ஆளில்லா வாகனங்களை இயக்குதல் என பல்வேறு துறையினருக்கும் ஐந்து ஜி சேவை மிகவும் பயனளிப்பதாக இருக்கும். இவை யாவும் புதிது புதிதாக பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும்,  இந்திய சமூகத்தின் நிலை மாற்றும் சக்தியாக உருவெடுக்கும் சாத்தியங்கள் இந்த ஐந்து ஜி தொழில் நுட்பத்திற்கு உண்டு.
பாரம்பரியத் தடைகளை ஒரே தாண்டாக தாண்டி  நாட்டை மேம்பாட்டை நோக்கிச் செல்ல வைக்கும் திறன் இந்த தொழில் நுட்பத்திற்கு உள்ளது.  டிஜிடல் இந்தியா மற்றும் அதைச் சார்ந்த பணிகள் அதன் பயன்பாடுகள் மக்களை அடைவதற்கு ஐந்து ஜி அவற்றை  முன்னெடுத்து செல்லும்.  இன்டெர்னெட் ஆஃப் திங்க்ஸ் எனும் ஐ.ஓ.டி தொழில்நுட்பமானது மிகப் பெரும் அளவில் பயன்பாட்டுக்கு வரக்கூடும்.  இதன் மூலம் வீட்டுச் சாதனங்கள், வாகனங்கள், அலுவலக சாதனங்கள் உள்ளிட்டவற்றை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி செல்லிடப்பேசி மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் கட்டுப்படுத்தலாம், கண்காணிக்கலாம், பெருமளவில் தகவல்களைச்  சேமிக்கமுடியும், தரவிறக்கம் செய்யமுடியும்.
இந்தியாவின் தேவைகளுக்கேற்ப ஐந்து ஜி தொழில் நுட்பமானது ஏராளமான பயனுள்ள வேலைகளுக்கு பயன்படும்.  உள்துறை கட்டுமானங்களுக்காக மிக குறைந்த அளவிலேயே முதலீடுகள் தேவைப்படும் என்பதால், ஏனைய முன்னேறிய நாடுகளை விட இந்தியாவில் ஐந்து ஜியின் மதிப்பு மிக அதிகமாகும்.

ஒரு நல்ல உதாரணம் தொலைபேசி.  1990களின் இறுதி வரை அதிக  செலவு பிடிக்கும் என்பதால் இந்தியாவில் தொலைபேசி அடர்த்தி என்பது குறைவாகவே இருந்தது.  ஆனால் 21 செல்லிடபேசி நெட்வொர்க் வருகையினால் கட்டணம் வெகுவாக குறைந்தது.  இதன் விளைவாக 1995ல் 5 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்த தொலைபேசி சேவையானது 2010ல் 95 சதவிகிதமாக உயர்ந்தது, இந்திய பொருளாதாரத்தில் , மிக பெரும் ஆதாயங்களை கொண்டு தந்தது.  நான் கு ஜி ஸ்மார்ட் அலைபேசிகளில் தந்தியில்லா இணைய சேவையை பகிர்தல்   சாத்தியமானது சமீபத்திய உதாரணமாகும்.  ஆரம்பகட்டத்தில் இருந்தாலும் கூட  வாகன பகிர்வு குறிப்பிடதக்க உள்கட்டுமான மதிப்பிற்கு உறுதி அளிக்ககூடும்.
உற்பத்தியில்,ஐந்து ஜி மூலம் ரோபாட்டிக்ஸை பயன்படுத்தி துல்லிய உற்பத்தி செய்யமுடியும், முக்கியமாக எங்கெல்லாம் மனிதர்களால் ஆபத்தில்லாமல் பத்திரமாக வேலை செய்ய முடியாதோ மற்றும் துல்லிய்மாக பணியாற்ற முடியாத இடங்களில் ஐந்து ஜி தொழில் நுட்பம் உபயோகமாகும்.  கச்சா பொருட்களில் இருந்து பொருட்கள் தயாரிப்பு வரை கண்காணிப்பதற்குச் சிறந்த தளவாடங்களை ஐந்து ஜி தொழில் நுட்பம் அமைத்து தரும்.
வேளாண் துறையில்  துல்லிய விவசாயம், பாசனம், மேம்படுத்தப்பட்ட மண் மற்றும் பயிர் கண்காணிப்பு முதல் கால் நடை பராமரிப்பு வரை ஐந்து ஜி தொழில் நுட்பத்தால் முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியும்.
எரிசக்தி துறையில் ஐ.ஓ.டி செயல்பாடுகளுக்கு ஏற்ற வகையில் மின் சாதனங்கள் தயாரிக்கப்படத்  துவங்கி விட்டன; இதன் மூலம் மாற்று எரிசக்தி தொழில் நுட்பங்கள் வளர்ச்சியடையும்.  சுகாதாரத் துறையில்,  செல்லிடபேசி மூலமாக மருந்துகள் பெறுதல்,  அறுவை சிகிச்சைகளில் உதவும் ரோபோக்களை செல்லிடபேசி மூலம் கட்டுபடுத்துதல், இயக்குதல் மற்று முக்கிய புள்ளி விவரங்களை கண்காணித்தல் போன்றவற்றை ஐந்து ஜி தொழில் நுட்பமானது மிக திறம்பட செய்யமுடியும்.


____________

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.