ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம்.
(பத்திரிக்கையாளர் மனோஹர் மனோஜ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.)
ஜி-20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் இரண்டு நாள் சந்திப்பு, ஜப்பானின் ஃபுகௌகாவில் நடைபெற்றது. தற்போதைய உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. ஜி-20 உறுப்பினர் நாடுகளின் பல்வேறு வர்த்தக மற்றும் வரிவகைப் பிரச்சனைகளைப் பற்றி கருத்து பரிமாறப்பட்டு சுட்டிக்காட்டப்பட்டதோடு மட்டுமல்லாமல், இம்மாத இறுதியில் ஒசாகாவில் நடக்கவிருக்கும் ஜி-20 உச்சிமாநாட்டிற்கான ஆரம்பக் கட்டப் பணிகளும் இந்த சந்திப்பில் துவக்கப்பட்டன. மிகப் பெரிய பொருளாதார வல்லரசுகளான அமெரிக்கா மற்றும் சீனா பின்பற்றும் பாதுகாப்புவாதக் கொள்கையை மறு பரிசீலனை செய்வதற்கான வழிவகைகளையும் இந்த சந்திப்பு அளித்திருக்கின்றது. இதைத் தவிர, ஃபேஸ்புக், கூகிள் போன்ற பன்னாட்டு மற்றும் டிஜிட்டல் நிறுவனங்களுக்கான புதிய வரிக் கொள்கைகளை உருவாக்குவதன் அவசியத்தையும் இந்த சந்திப்பு வலியுறுத்தியது. உலகெங்கும் அதிகரித்துக் கொண்டிருக்கும் பண மோசடி, வங்கி முறைகேடுகள், நிதிக் குற்றங்கள், பொருளாதாரக் குற்றங்கள் ஆகியவற்றை முடக்குவதற்கான அவசியத்தையும் இந்த சந்திப்பு சுட்டிக்காட்டியது.
தற்போது அமெரிக்கா சீனா இடையே வர்த்தகப் போர் நடைபெற்றுவரும் நிலையில், ஜி-20 நாடுகளின் நிதி அமைச்சர்களுக்கிடையிலான ஃபுகௌகா சந்திப்பு முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. இந்த வர்த்தகப் போர் அமெரிக்கா மற்றும் சீனாவின் இருதரப்பு வர்த்தகத்த்துக்கு ஆபத்து விளைவிப்பதோடு, உலக வர்த்தகத்தையும் பெரிய அளவில் பாதிக்கின்றது. சீனாவுடனான 37900 கோடி டாலர் வணிகப் பற்றாக்குறறையை ஈடுகட்ட, 25000 கோடி மதிப்பிலான சீன இறக்குமதிகள் மீது, 25 சதவிகித கூடுதல் வரியை அமெரிக்கா விதித்தது. இதற்குப் பதிலடியாக, 11000 கோடி டாலர் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதிகள் மீது சீனா வரி விதித்தது. உலகளாவிய பொருளாதார வளர்ச்சி அரை சதவிகிதம் குறைந்ததால், உலக வணிகத்தின் வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டிக்கான, உலக வளர்ச்சிக்கான தனது கணிப்பை, சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே, 3.6 சதவிகிதத்திலிருந்து 3.3 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. வரவிருக்கும் ஒசாகா ஜி-20 நாடுகளின் உச்சிமாநாட்டில் அமெரிக்காவும் சீனாவும் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளைப் பேசி சரி செய்து கொள்ளாத வரை, இந்த வணிகப் போருக்கு முடிவு எற்படாது என்பதே உண்மை.
எனினும், ஃபுகௌகா மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்டீவன் நுசின், அமெரிக்கா, சீனா இடையிலான வணிகப் போரால் அதிக பாதிப்பு இல்லை என்றே தன் கருத்தை வெளிபடுத்தினார். அமெரிக்காவும் சீனாவும் தங்களது வணிகப் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள முடியாத பட்சத்தில், 30000 கோடி டாலர் மதிப்பிலான பிற சீனப் பொருட்களின் மீது அமெரிக்கா வரிகளை விதிக்கும் என அவர் தெரிவித்தார். சீனா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளால், பல சீன முதலீடுகளும் உற்பத்திக் குழுக்களும், அமெரிக்கா உட்பட பிற நாடுகளுக்குச் சென்றுவிட வாய்ப்புண்டு என்றும் அதனால் உலகப் பொருளாதாரத்திலும் வளர்ச்சி ஏற்படும் என்றும் அமெரிக்கா கருதுகிறது. புதிய முதலீடுகளுக்காகக் காத்திருக்கும் பல ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நிலையை சார்ந்தும் அமெரிக்க கருவூலச் செயலரின் கருத்தை ஒத்துப் பார்க்க வேண்டும். எனினும், அமெரிக்கா மற்றும் சீனாவிற்குப் பிறகு, உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமான ஜப்பான், சீனா அமெரிக்கா வணிகப் போரால் அதிக சலனத்தில் உள்ளது. 1999 ஆம் ஆண்டு ஜி20 நாடுகளின் குழுமம் உருவாக்கப்பட்டதிலிருந்து, ஜப்பான், ஜி-20 உச்சி மாநாட்டை முதன் முறையாக நடத்துகின்றது. ஜப்பானிய நிதி அமைச்சர் தாரோ அசோ, சீனா மற்றும் அமெரிக்கா கடைபிடிக்கும் பாதுகாப்புவாதக் கொள்கையால், ஜப்பான் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளும் குறைந்து விட்டன எனக் கூறினார்.
இந்தியாவைப் பொறுத்த வரையில், இந்த ஜி-20 நிதி அமைச்சர்களின் சந்திப்பில், இருதரப்பு பொருளாதாரக் கூட்டுறவின் கீழ், வரி தவிர்ப்பிற்காக புதிய உலகமுறையை உருவாக்குவதிலும், சர்வதேச வரிவகைக்கான ஒரு புதிய முறையை உருவாக்குவதிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இந்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள், ஃபுகௌகா சந்திப்பில் கலந்துகொள்வதற்கு முன்னரே, இந்த சந்திப்பிற்கான தனது திட்ட நோக்கைத் தெரிவித்திருந்தார்.
இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனில், உறுப்பினர் நாடுகளின் வருவாய்க்கான சாத்தியக்கூறுகள் பாதிக்கப்படும் என இந்தியா எண்ணுகின்றது. தொழில்நுட்ப பன்னாட்டு நிறுவனங்கள் பெரிய அளவில் வரிகளைத் தவிர்த்து வருகின்றன. அந்த நிறுவனங்களின் உபயோகிப்பாளர்கள் மற்றும் அவரவரது நாடுகளின் அடிப்படையில், வரியைக் கணக்கிடுவது ஒரு கடினமான விஷயமாக இருந்து வருகிறது. அமெரிக்கா சீனா இடையிலான வணிகப் போரால், அமெரிக்காவுடனான இந்தியாவின் வணிக சாத்தியக்கூறுகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி-20 நாடுகளில், உலக ஜனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் உள்ளனர். மொத்த உலக வர்த்தகத்தில், இந்நாடுகளில் 85 சதவிகிதத்தையும் விட அதிக வர்த்தகம் நடக்கின்றது. ஃபுகௌகா சந்திப்புடன், உலகின் 50 நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் கலந்துகொண்ட வணிகம் மற்றும் வர்த்தகத்திற்கான மாநாடும் நடைபெற்றது. மொத்தத்தில், ஃபுகௌகாவில், ஜி-20 நாடுகளின் நிதி அமைச்சர்கள், நடக்கவிருக்கும் ஜி20 நாட்டுத் தலைவர்களின் ஒசாகா உச்சிமாநாட்டில், அனைத்துப் பிரச்சனைகளுக்கும் இணக்கமான தீர்வு காண்பதற்கான ஒரு புதிய அடித்தளத்தை அமைக்க முயற்சி செய்தனர்.
Comments
Post a Comment