பாம்பியோ – லாவரோவ் பேச்சுவார்த்தை – ஒரு புதிய சமாதான முயற்சி

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் அமெரிக்க கல்வி மையத்தின் தலைவர் முனைவர் சிந்தாமணி மஹாபாத்ரா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி குருமூர்த்தி

அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு மைக் பாம்பியோ முதல் முறையாக ரஷ்யப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு செர்கெய் லாவரோவ் அவர்களுடனும் அதிபர் விளாடிமிர் புதின் அவர்களுடனும் பேச்சு வார்த்தை நடத்தினார். ரஷ்யாவுடனான புதிய சமாதான நிலைப்பாட்டை உருவாக்க அமெரிக்க அதிபரின் புதிய செயலுத்தியாகவே இது கருதப்படுகிறது.
ரஷ்யா – அமெரிக்கா இடையே அண்மைக் காலங்களில் உருவாகியுள்ள புதிய, சிறிய பனிப்போர் உலக நாடுகளால் கவனிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் சோவியத் யூனியனின் மிகப் பெரிய பகுதியாக இருந்தாலும், ரஷ்யா அதன் ஒரு பகுதியே என்ற நிலையில், இரு நாடுகளுக்கிடையிலான இந்த மோதலை ஒரு பனிப்போர் என்று கருத அமெரிக்கா விரும்பவில்லை.
அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் பனிப்போர் நிலவிய காலத்தில் கூட, அணு சக்தியில் இரு நாடுகளும் சமமான  நிலையில் இருந்ததை ஒப்புக்கொண்ட அமெரிக்காவின் அடுத்தடுத்த அரசுகள் தனக்குச் சமமான நிலையில் ரஷ்யாவை வைத்துப் பேசத் தயக்கம் காட்டியே வந்துள்ளன.  இரு நாடுகளுக்கிடையேயான ஆதிக்கக் கட்டமைப்பு அமெரிக்காவை நோக்கிய சார்பு நிலையிலேயே இருந்து வந்துள்ளது. பொருளாதார நிலை மற்றும் தொழில்நுட்ப மேன்மை ஆகியவற்றில் தான் பெரும் பலம் பொருந்தியுள்ளதாக அமெரிக்கா ஏற்படுத்தி வந்துள்ள தோற்றம் இதற்கு ஒரு காரணமாகும். ரஷ்யா, இப்போது தனி நாடாக நின்று, தனது அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தால்,  அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக உருவாகி வருகிறது என்பதை அமெரிக்கா ஒப்புக்கொள்வதில்லை.
ஆனால், இந்தச் சிறு அளவிலான பனிப்போரை உலக நாடுகள் உணரத் தவறவில்லை. ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தத்துக்கு ஆதரவு, சிரிய அரசுக்கான ஆதரவு மற்றும் அண்மையில் வெனிசுலாவில் மடூரோ அரசுக்கு ஆதரவு ஆகியவை ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தும் டிரம்ப்பின் முயற்சிச் சவால் விடுத்துள்ளன.
தெற்கு ஒசேஷியா, ஜார்ஜியா, கிழக்கு உக்ரைன், க்ரீமியா ஆகியவற்றின் மீது ரஷ்யா தனது ராணுவ ஆதிக்கத்தைப் பிரயோகப்படுத்திய போது அமெரிக்கா வெறும் பார்வையாளராகவே இருந்தது. சில பொருளாதாரத் தடைகளை விதித்தாலும், ரஷ்யாவைத் தடுக்க அமெரிக்காவால் இயலவில்லை.
முன்னாள் அதிபர் ஒபாமா போல், அதிபர் டிரம்பும் அமெரிக்க – ரஷ்ய உறவுகளைச் சீர் செய்ய முனைந்தபோதிலும், அமெரிக்காவின் உள்நாட்டு அரசியல் சூழல் அதற்கு ஒரு தடையாக இருந்தது. டிரம்ப் அவர்களின் தேர்தல் பிரச்சாரத்தில் ரஷ்யாவின் தலையீடு உள்ளதாகவும் ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக ரஷ்யா செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டு இருந்தது, மேலும் புதின் ஒரு வலுவான தலைவர் என்று டிரம்ப் பாராட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

முல்லர் புலனாய்வு அறிக்கை டிரம்ப் அவர்களை இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்த நிலையில், ரஷ்ய உறவுகளை மேம்படுத்தி, நம்பகத்தன்மையை மீட்க அமெரிக்க அரசு விழைந்துள்ளது. அதன் ஒரு பகுதியே பாம்பியோ – லாவரோவ் சந்திப்பு. இதன் மூலம் அமெரிக்கா பல இலக்குகளை எட்டக்கூடும். முதலில், வளர்ந்து வரும்சீனா – ரஷ்யா நெருக்கத்தைக் கட்டுப்படுத்துதல்,  இரண்டாவதாக, சீனாவுடனான வர்த்தகத்தில் இன்னும் கடுமையான போக்கைக் கையாளுதல், மேலும், ஈரான் மீதான அழுத்தத்தை மேம்படுத்துதல், சிரியாவில் மாற்றம் ஏற்படுத்துவதில் அமெரிக்காவின் தோல்வியை மறைத்தல்  ஆகியன அமெரிக்காவின் நோக்கங்கள்.
ஆனால், ரஷ்யாவுடனான டிரம்பின் அணுகுமுறை சிறப்பான வெற்றி பெறாமல் போகலாம். ஆற்றல் துறையில் ஐரோப்பிய நாடுகளுடனான ஒத்துழைப்பின் பயன்களை ரஷ்யா ஏற்கெனவே அனுபவித்து வருகிறது. மேலும், அட்லாண்டிக் ஒட்டிய நாடுகளுடனான அமெரிக்காவின் நெருக்கமான உறவுகளில் ஏற்பட்டுவரும் விரிசலையும் ரஷ்யா அமைதியாகக்  கவனித்து வருகிறது. சீனாவுடனான செயலுத்தி மற்றும் ஆற்றல் ஒத்துழைப்பின் மூலமும் ரஷ்யா பயனடைந்து வருகிறது. மேலும், அமெரிக்காவின் CATSA சட்டம், இந்தியா, துருக்கி போன்ற நாடுகளுகான ரஷ்யாவின் ஆயுத விற்பனையை முடக்கும் நோக்கத்தில் இருந்தாலும், அது பெரும் வெற்றியை அளிக்கவில்லை.

அமெரிக்கா – ரஷ்யா இடையேயான நேர்மறையான ஒத்துழைப்பு உறவுகள் சர்வதேச நிலைத்தன்மைக்கும் இந்தியாவின் நலனுக்கும் உதவும்.  இவ்விரு நாடுகளின் மோதல் போக்கால் இந்தியாவுக்குப் பாதிப்பு உண்டு. பனிப் போர் காலத்திலும் சரி, இன்றைய சூழலிலும் சரி, இந்தியா எந்த ஒரு தரப்பையும் சாராமல் நடுநிலையோடே இருந்து வருகிறது. இந்தியாவிற்கான ஆயுத விற்பனையை அமெரிக்கா அதிகரிக்க விரும்புகிறது. அதற்காக ரஷ்யாவிடமிருந்து இந்தியா ஆயுதம் வாங்குவதை அது தடுக்க அவசியம் இல்லை. ரஷ்யாவிடமிருந்து எஸ்- 400 ஏவுகணைகளை இந்தியா வாங்குவதற்குப் பொருளாதாரத் தடை விதித்துள்ளது அமெரிக்கா. இது இந்திய – அமெரிக்க உறவுகளுக்கு ஒரு அச்சுறுத்தலாகவே கருதப்படுகிறது. அமெரிக்க – ரஷ்ய உறவுகள் மேம்படுவது இந்தியாவிற்கு ஆதாயம் தரும் என்றால் அது மிகையல்ல.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.