பயங்கரவாதத் தாக்குதல்களுக்கிடையில், பாகிஸ்தானுக்குப் புத்துயிர் அளிக்கும் நிதியுதவி.
(அரசியல் விமர்சகர் அஷோக் ஹாண்டு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஸ்ரீபிரியா சம்பத்குமார்.)
பல மாதங்களாக நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஐ.எம்.எஃப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம், பாகிஸ்தானுக்கு மீண்டும் ஒருமுறை நிதி உதவி பெறும் வாய்ப்பை அளித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமரின் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகர் டாக்டர். ஹஃபீஸ் ஷேக், பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கு வருகை தந்த ஐ.எம்.எஃப் குழுவுக்கும் இடையில் நடந்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்த உதவிக்கான அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறினார். பாகிஸ்தான் தன்னுடைய நாட்டின் நிதி நெருக்கடியை சரி செய்துகொள்ள, அடுத்த 3 ஆண்டுகளில், ஐ.எம்.எஃப். அந்நாட்டிற்கு 600 கோடி டாலர் நிதி உதவி அளிக்கும். கடனில் மூழ்கியிருக்கும் பாகிஸ்தானுக்கு கடன்களைத் திருப்பிச் செலுத்தி நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்ய, சுமார் 1800 கோடி டாலர் தேவைப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
எட்டு மாதங்களுக்கு முன்னர், இம்ரான் கான், பாகிஸ்தானின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, ஐ.எம்.எஃப், நிதியுதவி அளிக்க, கடினமான நிபந்தனைகளை இடும் பட்சத்தில், தான் அந்த அமைப்பிடமிருந்து நிதி உதவியைப் பெற மாட்டேன் என்று கூறியிருந்தார். சீனா, சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நட்பு நாடுகள் மீது அவர் அதிக நம்பிக்கைக் கொண்டிருந்தார். எனினும், தற்போது ஐ.எம்.எஃப் அளித்துள்ள உதவிக்கு, அந்த அமைப்பு பல புதிய நிபந்தனைகளை சேர்த்துக் கொண்டே போனது. வேறு வழியின்றி இம்ரான் கானும் ஐ.எம்.எஃப் கூறிய அனைத்து நிபந்தனைகளுக்கும் தற்போது ஒப்புக் கொண்டுள்ளார். அதிகப்படியான பண முறை மறுசீரமைப்புகள், நிதி நிலை சீரமைப்புகள், அதிக வருவாய் ஈட்ட வரி அதிகரிப்பு, விரிவான கட்டமைப்பு சீர்திருத்தங்கள், மானியங்களைக் குறைத்தல், சந்தைகளால் நிர்ணயிக்கப்படும் அந்நிய செலாவணி விகிதங்களை ஏற்றுக் கொள்ளுதல் ஆகியவை ஐ.எம்.எஃப் விதித்துள்ள நிபந்தனைகளில் சிலவாகும்.
பொது மக்களை மேலும் சங்கடப்படுத்தும் என்ற காரணத்தால், தான் வரிகளை உயர்த்த மாட்டேன் என்றும், மின் மற்றும் எரிவாயு கட்டணங்களையும் அதிகரிக்க மாட்டேன் என்றும் இம்ரான் கான் கூறியுள்ளது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இந்த நடவடிக்கைகளால் வருவாய் குறைந்து பணவீக்கம் அதிகரிக்கும். ஏற்கனவே அங்கு, அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரித்து வருகின்றன. எஃப்.ஏ.டி.எஃப் என்ற நிதி நடவடிக்கை பணிக் குழுவின் சாம்பல் பட்டியலில் இருக்கும் பாகிஸ்தான், எப்போது வேண்டுமானாலும் மேலும் கீழே, கருப்புப் பட்டியலுக்குத் தள்ளப்படலாம் என்ற அச்சமும் மேலும் இறுக்கத்தை அதிகரித்து வருகின்றது.
பாகிஸ்தான் பிரதமர், நிதி அமைச்சர் அசாத் உமர் மற்றும் பாகிஸ்தான் ஸ்டேட் வங்கியின் கவர்னர் தாரிக் பாஜ்வா ஆகிய இருவரையும் வெளியேற்றிவிட்டு, அவர்களுக்குப் பதிலாக முன்னாள் ஐ.எம்.எஃப் அதிகாரிகளை நியமித்துள்ளார். இதிலிருந்து அந்நாட்டின் பொருளாதாரம் தீவிர சரிவில் இருக்கிறது என்பது தெளிவாகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.9 சதவிகிதம் என்ற அளவிற்கு குறைந்து விட்டது. பணவீக்கம் 9.4 சதவிகிதத்தை எட்டிவிட்டது. அந்நிய செலாவணி கையிருப்பு வெறும் 900 கோடி டாலர் என்ற அளவிற்குக் குறைந்து விட்டது.
இப்படிப்பட்ட ஒரு பரிதாபமான நிலையில், ஐ.எம்.எஃப்- இன் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்வதைத் தவிர, இம்ரான் கானுக்கு வேறு வழியில்லை. பாகிஸ்தான் கடுமையான நிதி ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதையே இது சுட்டிக்காட்டுகின்றது. இதுவும் இரண்டு முக்கிய விஷயங்களைச் சார்ந்து இருக்கும். முதலாவதாக, கடுமையான கரம் கொண்டு பயங்கரவாதத்தை அந்நாடு ஒடுக்க வேண்டும். அப்போதுதான் அமைதி நிலவி, வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி உதவி கிடைக்கும். இரண்டாவதாக, நாட்டின் அரசியல் முடிவுகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் எடுக்க வேண்டும். நாட்டின் ராணுவம், நாட்டின் பாதுகாப்பை கண்காணிக்கும் பணியோடு தங்களது ஈடுபாட்டை நிறுத்திக் கொள்ள வெண்டும்.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதி உதவி என்பது உலக சமூகத்திற்கு ஒரு மிகப்பெரிய கவலைக்குரிய விஷயமாக உருவெடுத்துள்ளது. இதனால், நாட்டை தற்போதிருக்கும் கொந்தளிப்பிலிருந்து மீட்டு, பொருளாதாரத்தை சீர் செய்ய, பாகிஸ்தானால், மற்ற நாடுகளிடமிருந்தோ அல்லது அமைப்புகளிலிருந்தோ கடன்களைப் பெற முடிவதில்லை. கடந்த சில காலமாக, பாகிஸ்தானில் நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சமீபத்தில், பலுசிஸ்தானின் குவாடர் நகரில் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடந்த தாக்குதல் நினைவிருக்கலாம். பி.எல்.ஏ எனப்படும் பலுசிஸ்தான் விடுதலைப் படை பொறுப்பேற்ற இந்தத் தாக்குதலில், ஐந்து பேர் கொல்லப்பட்டனர். முன்னதாக, பலுசிஸ்தானின் ஹர்னாய் மாவட்டத்தில், ஒரு பேருந்திலிருந்து பயணிகள் கீழிறக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இதில் பாகிஸ்தான் கடற்படை வீரர்களும் அடங்குவர். பல காலமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் பிரிவினைவாத இயக்கங்கள் பி.எல்.ஏ-வால் முன்னடத்திச் செல்லப்படுகின்றன. பாகிஸ்தானின் மிகப் பெரிய மாகாணமாக இருந்து கொண்டு, பல இயற்கை வளங்களைப் பெற்றுள்ள போதிலும், தாங்கள் இன்னும் நாட்டின் மிக ஏழ்மையான மாகாணமாக இருப்பதே பலுச் மக்களின் மிகப்பெரிய குறையும் வருத்தமுமாகும்.
சி.பி.ஈ.சி எனப்படும் சீனா பாகீஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் பெரும்பான்மையான பகுதி பலுசிஸ்தான் வழியாக செல்கிறது. எனினும், இதனால் இந்த மாகாணத்திற்குப் பெரிதாக, சாதகமான நன்மை ஒன்றும் இல்லை என்பதே உண்மை. ஆகையால், பலுசிஸ்தானைச் சேர்ந்த மக்கள் இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தப் பணித்திட்டத்தில் பணியில் இருக்கும் சீனர்களுக்கு எதிராக, அவர்களுடைய எதிர்ப்பைக் காட்டவே, ஓட்டலில் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் கூறப்படுகின்றது. தங்களுடைய வணிகப் பயணங்களின் போது சீனர்களில் பெரும்பாலானோர் இந்த குறிப்பிட்ட ஓட்டலில் தங்குவது வழக்கம். மொத்தத்தில், ஐ.எம்.எஃப் தற்போது கொடுத்துள்ள புத்துயிர் அளிக்கும் நிதி உதவி, பாகிஸ்தானுக்கு ஒரு தற்காலிக நிவாரணத்தை அளித்துள்ளது. தங்கள் நாட்டின் நலனுக்காக, பாகிஸ்தான் தலைவர்கள், நிலைமையை சரியாகப் புரிந்து கொண்டு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டியது மிக அவசியமாகும்.
Comments
Post a Comment