ஏறுமுகத்தில் இந்தியா – வியட்னாம் உறவுகள்.

(நாடாளுமன்ற ஆய்வாளர் ராஜாராம் பாண்டா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.)
இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு அவர்கள், வியட்னாமிற்கு நான்கு நாட்களுக்கான அரசியல் பயணத்தை மேற்கொண்டார். வியட்னாமுடனான விரிவான செயலுத்திக் கூட்டாளித்துவத்தை மேம்படுத்துவது இந்தப் பயணத்தின் முக்கிய இலக்காகும். இந்தியா-வியட்னாம் உறவு காலத்தின் சோதனைகளைக் கடந்து வந்த உறவு என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும். வியட்னாமின் உயர் அரசியல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியதோடு, ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அங்குள்ள இந்திய வம்சாவளியினருக்கிடையில் பேசியபோது, திரு. நாயுடு, இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள உறவை வியந்து பாராட்டினார். வியட்னாம் நாட்டின் துணை ஜனாதிபதி திரு. டேங்க் தி காக் தின், வியட்னாம் பிரதமர் திரு. குயென் க்ஸுவான் ஃபுக் மற்றும் தேசிய அமைச்சரவையின் பெண் தலைவரான திருமதி. குயென் தின் கிம் கான் ஆகியோருடன் திரு. நாயுடு சந்திப்புகளை மேற்கொண்டார். வியட்னாமின் ஹா நாம் மாகாணத்தில், டாம் சுக் பகோடாவில் நடந்த ‘வெசாக்’ கொண்டாட்டங்களின் 16-வது ஐக்கிய நாடுகள் தினத்தில், திரு. நாயுடு முக்கிய உரையாற்றினார். இந்த நிகழ்வு ‘உலக தலைமைக்கான பௌத்த அணுகுமுறை மற்றும் நிலையான சமுதாயங்களுக்கான பகிரப்பட்ட பொறுப்புகள்’ என்ற கருத்தில் நடத்தப்பட்டது.
அவ்வப்போது, இரு நாடுகளைச்சேர்ந்த உயர் அரசியல் தலைவர்கள் இரு நாடுகளுக்கும் மேற்கொண்ட பரஸ்பரப் பயணங்களின்  மூலம் இருதரப்பு உறவுகள் வளர்ந்து, இந்தியப் பிரதமரின் 2016 ஆம் ஆண்டு வியட்னாம் பயணத்தின் போது விரிவான செயலுத்திக் கூட்டாளித்துவத்துவம் என்ற அடுத்த நிலைக்கு உயர்ந்தது. 2018 ஆம் ஆண்டு நடந்த பல உயர் மட்ட அரசியல் இருதரப்புப் பயணங்களைத் தொடர்ந்து, தற்போது குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு அவர்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். 2018 ஜனவரி மாதத்தில் வியட்னாம் பிரதமரும்,  மார்ச் மாதத்தில் வியட்னாம் அதிபரும் இந்தியாவுக்கு வருகை புரிந்தனர். இந்தப் பயணங்களால் பல துறைகளில் திடமான கூட்டுறவு, தற்காப்பு மற்றும் பாதுகாப்பு உறவுகளில் விரிவாக்கம், புதிய பொருளாதார மற்றும் வர்த்தக இணைப்புகளின் உறுதியான துவக்கம் மற்றும் இரு நாட்டு மக்களுக்கிடையிலான இணைப்புகளில் அதிக ஆழம் ஆகிய பல நன்மைகள் ஏற்பட்டுள்ளன. இந்தோ-பசிஃபிக் பகுதிகளில் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழுமைக்கான பொது விருப்பத்தை இரு நாடுகளும் கொண்டுள்ளன.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை நோக்கிச் செல்வது என்பது இந்திய வெளியுறவுக் கொள்கைகளின் முக்கியக் கருவியாக உயர்ந்துள்ளது. ஹனோயில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள், இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்திய நண்பர்களுக்கான கூட்டத்தில் பேசினார். வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதற்கு இந்திய அரசாங்கம் அளிக்கும் முன்னுரிமையைப் பற்றி அவர் எடுத்துரைத்தார்.
வியட்னாம் துணை அதிபர் திரு. டேங்க் தி காக் தின்னுடன், இருதரப்பு மற்றும் பலதரப்பு கூட்டுறவுகளை மேம்படுத்த, பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திய திரு. நாயுடு, தேசிய இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்திற்கான மரியாதையின் அடிப்படையில், அமைதியான மற்றும் செழுமையான இண்டோ-பசிஃபிக் பகுதியை உருவாக்குவதற்கான அவசியத்தை வலியுறுத்தினார். பரஸ்பர நம்பிக்கை, புரிதல், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் கருத்துகளின் ஒன்றிணைந்த நிலை ஆகியவை, இரு நாடுகளுக்கும் இடையில் இருக்கும் வலுவான இரு தரப்பு உறவுகளின் அடித்தளமாக இருக்கின்றன.
இந்தியாவின் கிழக்கு நோக்கிச் செயல்படும் கொள்கையின் முக்கிய செயலுத்தித் தூணாக வியட்னாம் விளங்குவதோடு, ஆசியானில் இந்தியாவின் கருத்துக்களுடன் ஒத்திசைவுள்ள முக்கிய நாடாகவும்  உள்ளது. ஆகையால், தென் சீனக் கடலில், ஒழுக்கக் கோட்பாட்டிற்கு இங்குள்ள அனைத்து நாடுகளும் ஒருமித்த ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என இரு நாடுகளும் விரும்புகின்றன. இந்தோ-பசிஃபிக்  பகுதி, இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கத்திய மற்றும் மத்திய பசிஃபிக் கடலுடன் தென் சீனக் கடலையும் உள்ளடக்கிய ஒரு உயிரி - புவியியல் பகுதியாகும். பிரச்சனைக்குரிய தென் சீனக் கடலில், அமெரிக்கா, தடையற்ற போக்குவரத்திற்கான பல பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதை, இறையாண்மையின் வரம்பு மீறல் என்று கூறி, இதை எதிர்த்து சீனா போராடுகிறது. இந்தக் கடல் பகுதி முழுவதும் தனது என சீனா சொந்தம் கொண்டாடும் அதே வேளையில், புரூனி, மலேசியா, ஃபிலிபைன்ஸ், தாய்வான், வியட்னாம் ஆகிய நாடுகளும் தங்களுடைய தனிப்பட்ட பொருளாதாரப் பகுதிகளில் வரும் கடல் பகுதிகளின் உரிமை தங்களுடையது எனக் கோரி வருகின்றன. இதனால் தென் சீனக் கடல் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக மாறி வருகிறது.
இருதரப்பு நிலையில், இந்தியா-வியட்னாம் உறவுகள் பல துறைகளில் வலுவான திடத்தன்மையைப் பெற்று, பன்முகத்தன்மைக் கொண்ட ஒரு உறவாக உருவெடுத்துள்ளன. தற்காப்பு மற்றும் பாதுகாப்பு, அணுசக்தி மற்றும் விண்வெளியை அமைதியான முறையில் பயன்படுத்துவது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் எரிவாயு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், உள்கட்டமைப்பு வளர்ச்சி, விவசாயம் மற்றும் புதுமை சார்ந்த துறைகள் ஆகியவற்றில் இரு நாடுகளும் கூட்டுறவை வலுப்படுத்தி வருகின்றன.
தற்போது இருதரப்பு வர்த்தகம் 1400 கோடி டாலர் என்ற அளவில் உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த 780 கோடி டாலரை விட தற்போது வர்த்தக அளவு இரட்டிப்பாகி உள்ளது. 2020 ஆம் ஆண்டிற்குள் 1500 கோடி டாலர் என்ற அளவை எட்ட வேண்டும் என்பதை இருநாடுகளும் இலக்காகக் கொண்டுள்ளன. கடந்த கால போக்குகளைப் பார்க்கும்போது இது சாத்தியம் என்றே தோன்றுகின்றது.
சில காலமாக இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்பு வசதிகளில் சில சிக்கல்கள் இருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, புது தில்லிக்கும் ஹனோய்க்கும் இடையில் நேரடி விமானங்கள் கிடையாது. முன்னர், இது பொருளாதார ரீதியாக சாத்தியமானதாகத் தோன்றாமல் இருந்தது. எனினும், இந்திய விமான நிறுவனங்களில் ஒன்று, இரு தலைநகரங்களுக்கும் இடையில் நேரடி விமானத்தை இவ்வாண்டு பின்பகுதியில் துவக்கும் எண்ணத்தில் இருப்பதால், இரு தலைநகரங்களுக்கு இடையிலான நேரடி விமான இணைப்பு ஏற்படும் சாத்தியக்கூறுகள் தற்போது ஏற்பட்டுள்ளன. இது நடந்துவிட்டால், இதன் மூலம் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறையில் அதிக வளர்ச்சி ஏற்பட்டு, இரு நாடுகளும் உறவுகளில் மற்றொரு எல்லையைத் தாண்டிவிடும், பரஸ்பர உறவுகளும் மேலும் அதிகரிக்கும்.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.