அமெரிக்கா – ஈரான் இரு தரப்பு உறவுகள்

ஈரான் குறித்த செயலுத்தி விவகாரங்கள் ஆய்வாளர் டாக்டர் ஆசிஃப் ஷுஜா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி ராம மூர்த்தி
ஒருங்கிணைந்த செயல் திட்டக் குழுவின் உறுதிமொழிகளை ஈரான் அரசு படிப்படியாகக் குறைத்துக் கொள்ளும் என ஈரான் அதிபர் ஹசன் ரௌஹானி அறிவித்துள்ளார். ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மத்திய கிழக்குப் பகுதிகளில் தனது படை பலத்தை அதிகரித்துள்ள நிலையில், ஈரான் அரசு இந்த முடிவெடுத்துள்ளது.
ஒருங்கிணைந்த செயல் திட்டக் குழுவில் இருந்து ஈரான் அரசு வெளியேறிய பின்னர், அமெரிக்க அரசு பல துணிச்சலான முடிவுகளை எடுத்து வருகின்றது. ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்க அரசு நிறைவேற்றத் துவங்கியுள்ள நிலைய்ல், செயல் திட்டத்தை நிறைவேற்றுவது கேள்விக்குறியே.  ஈரானின் புரட்சிப்படையைச் சேர்ந்தவர்களை தீவிரவாதிகள் என்றே அமெரிக்கா குறிப்பிட்டு வருகிறது. ஈரானிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா, தென் கொரியா போன்ற நாடுகளுக்குப் பொருளாதாரத் தடை விலக்கு அளிக்கவும் டிரம்ப் அரசு மறுத்துவிட்டது. முந்தைய அதிபரான ஒபாமாவின் செயல்பாட்டுக்கு இது முரணானதும் கூட.
அமெரிக்காவின் மத்திய கிழக்குப் பகுதிகளைத் தாக்க முற்படலாம் என்ற தகவல் கசியவே அமெரிக்க அரசு தனது ராணுவத் தளவாடங்களை மத்திய கிழக்குப் பகுதிகளில் நிறுத்தத் தொடங்கியதன் விளைவாக, அமெரிக்கா - ஈரான் இடையே  பனிப்போர் துவங்கியுள்ளது. அமெரிக்கக்  கடற்படைக் கப்பல் ஆபிரகாம் லிங்கன் மத்திய கிழக்குக் கடல் பகுதியில் முகாமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரான் நாட்டின் உயர் மட்ட தேசியக் குழுவின் முதல் சந்திப்பு நடைபெற்றது.
அக்கூட்டத்தின் முடிவில் ஒருங்கிணைந்த தேசிய செயல் திட்டங்களைச் சற்றே பின்னோக்கி எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. எனினும், ஒருங்கிணைந்த தேசிய செயல் திட்டக் குழுவிலிருந்து ஈரான் விலகாது எனவும் ஈரான் அதிபர் அறிவித்துள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்க அரசு விலகியுள்ளது, பொருளாதாரத் தடைகளை ஈரான் அரசு மீது விதிப்பது ஆகியவை தேவையில்லாத விஷயங்கள் என ஐரோப்பிய ஒன்றியம் போன்ற மற்ற நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.
ஈரான் அரசின் தற்போதைய நிலைப்பாடு நீடிக்குமானால், அமெரிக்க அரசும் ஈரான் நாட்டுப் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் செல்லுமானால், விளைவுகள் மீண்டும் விபரீதமாக மாறலாம் என உலக நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.
ஐரோப்பிய யூனியன் போன்ற சர்வதேச நாடுகள் அமெரிக்க மற்றும் ஈரான் அரசுகளைக் கட்டுப்படுத்தி நல்வழியில் எடுத்துச் செல்வது அவசியம் என உலக நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன. மத்திய கிழக்கு நாடுகள் ஏற்கெனவே பல்வேறு பிரச்சனைகளுக்குப் பெயர் போன பகுதியாகும். இந்த நிலையில் அமெரிக்காவும் ஈரானும் சண்டையிடத்  துவங்கினால், உலகத்தின் அமைதி கெடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும் என்பது நிபுணர்களின் கருத்தாகும்.
இந்தியா அரசு எப்போதும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்ப்பின் படியே செயல்பட்டு வந்துள்ளது. அமெரிக்க அரசிற்கும் ஈரான் நாட்டிற்கும் ஏற்புடைய தீர்வைக் கண்டறிந்தாக வேண்டும் என இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.  ஈரான் அரசின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் இந்திய எரிசக்தித் துறையையும் பாதித்துள்ளது.
அமெரிக்க அரசு,  ஈரான் அரசு இரண்டுமே இந்தியா அரசுக்குத் தொடர்ந்து நட்பு நாடுகளாகவே இருந்து வந்துள்ளன. இப்போது இந்தியாவின் இரண்டு நண்பர்கள் சண்டையிட்டுக் கொள்வது இந்திய அரசுக்குப் பொறுக்க முடியவில்லை. எனவே இரண்டு நாடுகளுமே பொறுமையாகப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுப் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வது அவசியம் எனக் கூறினால் அது மிகையாகாது.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.