பாதுகாப்பு தொடர்பான 2020 ஆம் ஆண்டின் மியூனிக் மாநாடு - முக்கிய அம்சங்கள்.

(ஐரோப்பிய விவகாரங்களுக்கான செயலுத்தி நிபுணர் டாக்டர் சங்கமித்ரா சர்மா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ராஜ்குமார் பாலா)

2020 ஆம் ஆண்டின் மியூனிக் பாதுகாப்பு மாநாடு, ஜெர்மனியின் மியூனிக் ந்கரில் கடந்த வாரம் நடைபெற்றது. ’மேற்கத்தியம் இல்லாத நிலை’ என்ற கருப்பொருளில் இந்த மாநாடு கவனம் செலுத்தியது. மேற்கத்திய நாடுகளின் மதிப்புகள் மற்றும் செயலுத்தி முறைகளுடன் ஏற்படும் மாறுபாடுகள் மற்றும் அசாதாரன நிலைமை காரணமாக இந்த கருப்பொருள் ஏற்பட்டது. இந்த மாநாட்டில் பேசிய வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பான நேட்டோவின் தலைமைச் செயலர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பெர்க், அமெரிக்கா தனது கூட்டாளிகள் மற்றும் உலக நாடுகளின் கவலைகளில் இருந்து விலகி இருப்பதாகச் சொன்னார். ஐரோப்பிய உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதை உறுதிப்படுத்தும் வகையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அவர்கள், அட்லாண்டிக் கடலை ஒட்டிய நாடுகள் கூட்டணி இல்லாமல் போனது என்று அளவுமீறி வலியுறுத்தப்பட்டதாகச் சொன்னார். மேற்கத்திய நாடுகள் வெற்றிபெற்று வருவதாகவும், அதுவும் கூட்டாக வெற்றி பெறுவதாகவும் அவர் சொன்னார். நேட்டோ மூலமாக ஐரோப்பிய எல்லைகளைப் பாதுகாப்பதில் அமெரிக்கா முக்கியப் பங்காற்றுவதாகவும், ஐ எஸ் தீவிரவாத அமைப்பை ஒழிப்பதில் பலநாடுகளின் இணைந்த முயற்சிக்குத் தலைமை ஏற்று இருப்பதாகவும் அவர் சொன்னார். சர்வதேச சமூகம் என்ற கருத்தையே கூட, அமெரிக்கா நிராகரித்து விட்டதாகவும், அண்டைநாடுகள் மற்றும் கூட்டாளிகளைப் பணயம் வைத்துவிட்டதாகவும் ஜெர்மானிய அதிபர் பிராங்க் வால்ட்டர் ஸ்டெயின்மெர் கூறினார். மேற்கத்திய நாடுகள் வலுவிழந்து வருவது பற்றி, பிரஞ்சு அதிபர் எம்மானுவேல் மேக்ரோன் அவர்களும் எச்சரித்தார்.

பிரஞ்சு அதிபர் மேக்ரோன், நேட்டோவை ஆதரித்த அதே நேரத்தில், பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் அமெரிக்காவிடமிருந்து விலகி தனித்துச் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். புதிய ராணுவ வல்லமை கொண்ட ஐரோப்பா என்ற செயலுத்தியை முன்னிறுத்தி மேக்ரோன் அவர்கள் கூறிய கருத்துகளை மாநாட்டின் தலைவர் ஐசிங்கெர் வரவேற்றார்.

உக்ரைன் மீதான நடவடிக்கைகளுக்காக ரஷ்யாவுக்கு எதிராகத் தடைகளை ஐரோப்பிய யூனியன் விதித்தாலும், ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தையைத் தொடரவும், மேலும் இணைப்பை உருவாக்கவும் பிரஞ்சு அதிபர் வலியுறுத்தினார். டம்பாஸில் மீண்டும் தாக்குதல்களும் வன்முறைகளும் வெடிக்கும் சாத்தியக்கூறு இருப்பதால், 2020 ஆம் ஆண்டில் மிக ஆபத்தான பகுதிகளில் ஒன்றாக உக்ரைனை இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியலிட்டிருந்தனர்.

மேற்கத்திய நாடுகளின் கொள்கைகள் குறித்து இன்று கேள்வி கேட்கப்படுவதாக ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சர் அன்னெகிரெட் கிராம்ப் கரென்பாவுர் குறிப்பிட்டார். பாதுகாப்பை சர்வதேச அளவில் உறுதி செய்ய ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்த அதே நேரத்தில், அவர் ஆப்பரிக்காவின் சஹேல் பகுதி உள்ளிட்ட வெளிநாட்டு தூதுக்குழுக்களில் ஜெர்மனி இன்னும் துடிப்பாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சீனாவின் ஹுவெய் தொலைத் தொடர்பு அந்நாட்டிற்காக உளவுபார்ப்பதாகக் கருதும் அமெரிக்காவும், ஐரோப்பாவும் இந்த மாநாடு முழுவதும் அது தொடர்பாக மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தன. மேற்கத்திய கட்டமைப்புக்குள் ஊடுருவ நினைக்கும் சீனாவின் குயுக்திக்கு ஹூவெய் நிறுவனம் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார். ஐந்தாம் தலைமுறை கட்டமைப்புகளை வடிவமைப்பதில் ஹூவெய் நிறுவனத்துக்கு வரையறுக்கப்பட்ட பங்குபணியைக் கொடுக்கும் முடிவு குறித்து மறுபடியும் ஆராயுமாறு பிரிட்டனை அவர் எச்சரித்தார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இடையேயான மோதல் எழும் வாய்ப்புக்கள் இல்லை என மறுத்த ஜெர்மானிய வெளியுறவு அமைச்சர் ஹெய்க்கோ மாஸ் அவர்கள், நேட்டோவின் சீர்திருத்தங்கள் குறித்தும், ஐரோப்பாவின் ஒருமித்த அணுகுமுறை குறித்தும் வலியுறுத்தினார்.

அமெரிக்கா ஐரோப்பா இடையேயான விரிசலுக்கு இடையே, தென்சீனக் கடலில் சீனாவின் செயல்பாடுகளுக்கும், அங்கு சீனா தனது ராணுவப் படையை நிறுத்திவருவது குறித்தும் மேற்கத்திய நாடுகள் ஒருமனதாகக் கண்டனம் தெரிவித்தன. சீனா ஆக்கப்பூர்வ வளர்ச்சிக்காகப் பாடுபடுவதாகக் கூறிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ அவர்கள், மேற்கத்திய முறையை சீனா பின்பற்றாது என்றும் குறிப்பிட்டார். உலகத்தில் அமைதியும் நிலைத்தன்மையும் நிலவ ஒத்துழைப்பு தேவை என்று அவர் அழைப்பு விடுத்தார்.

வூஹான் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று வேகமாகப் பரவிவருவதால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிப்பது குறித்தும், மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் விவாதித்தன. இந்த நோய் பரவாமல் தடுப்பதில் சீன அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை சீன வெளியுறவுத் துணை அமைச்சர் குயின் கேங் பாராட்டினார். கண்டறியப்பட்ட நோயாளிகளில் வெறும் 1 சதவிகிதம் மட்டுமே சீனாவுக்கு வெளியே இருப்பதாக அவர் சொன்னார்.

2020 மியூனிக் பாதுகாப்பு மாநாட்டின் போது பேசிய அமெரிக்க செனட் சபை உறுப்பினர் லின்ட்சே கிராஹம், காஷ்மீர் பிரச்சனைக்கு ஜனநாயக முறையில் தீர்வு காண்பதே ஜனநாயக சித்தாந்தத்தைப் பிரபலமாக்க சிறந்த வழி என்றார். இந்திய ஜனநாயகம் தனது வழியில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்தார். மியூனிக் மாநாட்டிற்கிடையே, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவை சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் அவர்கள், அமெரிக்க அதிபரின் இந்தியப் பயணம் குறித்து கலந்துரையாடினார். சௌதி அரேபியா மற்றும் ஓமன் நாட்டு வெளியுறவு அமைச்சர்களையும் இந்த மாநாட்டிற்கிடையே அவர் சந்தித்துப் பேசினார்.

மேற்கத்தியக் கூட்டணி தொடர்பாக உலக நாடுகளின் தலைவர்களின் எதிரும் புதிருமான கருத்துக்களை இந்த 2020 ஆம் ஆண்டின் மியூனிக் பாதுகாப்பு மாநாடு வெளிப்படுத்தியது கவனிக்கத்தக்கது. இது போன்ற முக்கிய மேடையில் அச்சுறுத்தல்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்து மாறுபட்ட கருத்துக்களும் விவாதங்களும் வெளிப்படுவது சகஜம் தான். எனினும், பொதுவான பாதுகாப்பு குறித்த ஒத்த கருத்துக்களை வெளிப்படுத்தி, கூட்டாகப் பிரச்சனைகளை சமாளிக்கவும், உலகை ஒரு பாதுகாப்பான வாழ்விடமாக உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொண்டால் அது சர்வதேச சமூகத்துக்கு நலம் பயப்பதாக அமையும்.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.