இந்தியா--ஈரான் 19-வது கூட்டுக் குழு கூட்டம்


(ஈரான் பற்றியும் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர்ஆஷிஃப் ஷஹுஜா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் லட்சுமண குமார்)

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்கள் இந்திய-ஈரான் கூட்டுக் குழுவின் 19 ஆவது கூட்டத்தில் கலந்து கொள்ள ஈரான் சென்றார். கூட்டு குழு கூட்டத்திற்கு இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் தலைமை தாங்கினார்கள். இரு நட்பு நாடுகளுக்கிடையே உள்ள ஆழமான உறவுகளை முன்னெடுத்துச் செல்ல இந்த கூட்டு குழு உருவாக்கப்பட்டது. தனது சுற்றுப்பயணத்தின் போது டாக்டர் ஜெய்சங்கர் அவர்கள் ஈரானிய அதிபர் டாக்டர் ஹசன் ரௌஹானி அவர்களை சந்தித்து கூட்டு குழு கூட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து எடுத்துரைத்தார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஈரானிய சுப்ரீம் தேசிய பாதுகாப்பு சபையின் தலைவர் ரியர் அட்மிரல் அலி ஷம்காணி மற்றும் சாலை போக்குவரத்து மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முஹம்மத் இஸ்லாமியையும் சந்தித்தார்.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பிரச்சனை காரணமாக ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதித்துள்ள நிலையில் இந்திய - ஈரான் உறவுகளை பலப்படுத்தும் வகையில் இந்த கூட்டம் அமைந்துள்ளது. குறிப்பாக, இந்த சிக்கலால் ஈரான் மீது அமெரிக்கா அரசியல் மற்றும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஈரான் அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா தன்னிச்சையாக வெளியேறிவிட்டது.

ஆக்கப்பூர்வமான இந்த கூட்டு கூட்டத்தில் இரு நாடுகளும் இருதரப்பு உறவுகளை விரிவாக ஆய்வு செய்தன. ஈரானிலுள்ள சபார் துறைமுக திட்டத்தை விரைவாக நிறைவேற்ற இருநாடுகளும் ஒப்புக்கொண்டன.

இந்திய-இரான் இரு தரப்பு உறவுகள் பற்றிய சிறப்பான பேச்சுவார்த்தை குறித்து தனது திருப்தியயை தெரிவித்த ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவேத் ஷரீப் அவர்கள், இரு நாடுகளுக்கிடேயேயான உறவுகள் பழமையானது, வரலாற்று சிறப்பு வாய்ந்தது மற்றும் துண்டிக்க முடியாதது என்று கூறினார்.

இணைப்பு, வியாபாரம் மற்றும் வர்த்தகம் துறைகளில் இந்தியா - ஈரான் ஒத்துழைப்பு உட்பட முக்கிய விஷயங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்தியா மற்றும் ஈரானை பாதிக்கும் பிராந்திய மற்றும் உலக விஷயங்கள் குறித்து இரு நாடுகளும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டன. மேலும், சபாரிலுள்ள ஷஹீத் பெஹஷ்தி துறைமுகத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அவர்கள் திருப்தி தெரிவித்தனர். சபார் துறைமுகம், இந்திய துணைக்கண்டம், ஈரான், ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பியாவிற்கான நுழைவு வாயிலாகுவதற்கான திறன் படைத்தது என்று அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எரிசக்தி வளம் நிறைந்த ஈரான் நாட்டின் தெற்கு கரையோரம் அமைந்துள்ள இந்த துறைமுகம் இந்தியாவின் மேற்கு கரையிலிருந்து எளிதில் அணுக கூடியது என்றும், சபார் துறைமுகத்திலிருந்து 80 கி. மீ தொலைவில் உள்ள, சீன முதலீட்டால் உருவாக்கப்பட்டு வரும் பாகிஸ்தானின் க்வதார் துறைமுகத்திற்கு மாற்றாக பார்க்கப்படுகிறது.

சபார் துறைமுகத்தை ஆப்கானிஸ்தானிலிருந்து ஏற்றுமதிக்கு பயன்படுத்துவதை இந்தியா மற்றும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் வரவேற்றார்கள். வர்த்தகம் மற்றும் போக்குவரத்து போன்ற விரிவான இணைப்பிற்கு பயன்படுத்தும் வகையில் இந்த துறை முகத்தை ஊக்குவிப்பது குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

இந்த கூட்டு குழு கூட்டத்தில் இந்தியாவும் ஈரானும் இருதரப்பு வியாபாரம் மற்றும் வர்த்தகத்தை பலப்படுத்துவதற்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார்கள். மேலும், வர்த்தகத்திற்கான இந்திய - ஈரான் கூட்டு பணிக் குழு கூட்டத்தை கூட்டி முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தம், இருதரப்பு முதலீட்டு உடன்படிக்கை ஆகியவற்றை இறுதி செய்யவும் மற்றும் காலால் விஷயங்களில் இந்திய - ஈரான் ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் முடிவு எட்டப்பட்டது.

முக்கியமாக, இந்தியாவும், ஈரானும் தீவிரவாதம் ஏற்படுத்தியுள்ள அசச்சுறத்தல் குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதாய் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். அதற்கேற்றாற் போல அனைத்து விதமான தீவிரவாதத்துக்கும் அடைக்கலம் கொடுப்பதை முடிவுக்கு கொண்டு வருமாறு அவர்கள் அழைப்பு விடுத்தனர். மேலும், இந்த பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிப்பதற்கான முயற்சிக்கு தங்களது முழு ஆதரவை அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.

இரு நாடுகளுக்கிடையேயான நட்பு உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் 2020 ஆம் ஆண்டு கொண்டாட்டங்களை நடத்துவது என்று 19 ஆவது இந்திய-ஈரான் கூட்டு குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இது சம்பந்தமாக, இந்தியாவும், ஈரானும் நாடாளுமன்ற உறுப்பினர்களை பரிமாறிக்கொள்வதை ஊக்குவித்து, கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்துவது என்று திட்டமிட்டுள்ளன.

அமெரிக்காவின் கடுமையான தடைகளால் ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சமயத்தில் இந்த கூட்டு குழுவின் கூட்டம் பன்முகத் தன்மை வாய்ந்த ஆழமான உறவை தொடர்வது என்ற இந்திய-ஈரானின் திடமான முயற்சிகளுக்கு உதாரணமாக அமைந்துள்ளது. கடந்த காலங்களில் இரு நாடுகளும் உயர்நிலை அளவில் சந்தித்து இந்த உறவுக்கான தங்களது உறுதிப்பாட்டை நிலைநாட்டியுள்ளன. ஈரானிய அதிபர் டாக்டர் ஹஸன் ரௌஹனி கடந்த வருடம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டது குறிப்பிடும்படியானது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொது சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் திரு மோதி அவர்கள் ஈரானிய அதிபரை சந்தித்தார். அப்போது அவர்கள் இந்திய-ஈரான் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தனர். சமீபத்தில் நடந்து முடிந்த கூட்டு குழு கூட்டம், இந்திய-ஈரான் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்பது திண்ணம்.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.